|
721 |
வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்த நீலக் குடியர னைந்நினை
சித்த மாகிற் சிவகதி சேர்திரே. | 5.72.1 |
722 | செய்ய மேனியன் றேனொடு பால்தயிர்
நெய்ய தாடிய நீலக் குடியரன்
மைய லாய்மற வாமனத் தார்க்கெலாங்
கையி லாமல கக்கனி யொக்குமே. | 5.72.2
|
723 | ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு
கூற்றன் மேனியிற் கோலம தாகிய
நீற்றன் நீலக் குடியுடை யானடி
போற்றி னாரிடர் போக்கும் புனிதனே. | 5.72.3
|
724 | நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல்
ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர்
நீலன் நீலக் குடியுறை நின்மலன்
கால னாருயிர் போக்கிய காலனே. | 5.72.4
|
725 | நேச நீலக் குடியர னேயெனா
நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால்
ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய்
நாச மானார் திரிபுர நாதரே. | 5.72.5
|
726 | கொன்றை சூடியைக் குன்ற மகளொடு
நின்ற நீலக் குடியர னேயெனீர்
என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர்
பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே. | 5.72.6
|
727 | கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே. | 5.72.7
|
728 | அழகி யோமிளை யோமெனு மாசையால்
ஒழுகி ஆவி உடல்விடு முன்னமே
நிழல தார்பொழில் நீலக் குடியரன்
கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே. | 5.72.8
|
729 | கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்டிங்கள்
பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன்
நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன்
சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே. | 5.72.9
|
730 | தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள்
அரக்க னாருட லாங்கோர் விரலினால்
நெரித்து நீலக் குடியரன் பின்னையும்
இரக்க மாயருள் செய்தனன் என்பரே. | 5.72.10
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர், தேவியார் - நீலநிறவுமையம்மை.