5.71 திருவிசயமங்கை - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

711

குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ்
வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையுந் தானுமொன் றாயினான்
விசைய மங்கையுள் வேதியன் காண்மினே.

5.71.1
712

ஆதி நாதன் அடல்விடை மேலமர்
பூத நாதன் புலியத ளாடையன்
வேத நாதன் விசயமங் கையுளான்
பாத மோதவல் லார்க்கில்லை பாவமே.

5.71.2
713

கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில்
வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை
உள்ளி டத்துறை கின்ற உருத்திரன்
கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே.

5.71.3
714

திசையு மெங்குங் குலுங்கத் திரிபுரம்
அசைய வங்கெய்திட் டாரழ லூட்டினான்
விசைய மங்கை விருத்தன் புறத்தடி
விசையின் மங்கி விழுந்தனன் காலனே.

5.71.4
715

பொள்ள லாக்கை அகத்திலைம் பூதங்கள்
கள்ள மாக்கிக் கலக்கிய காரிருள்
விள்ள லாக்கி விசயமங் கைப்பிரான்
உள்ள நோக்கியெ னுள்ளுள் உறையுமே.

5.71.5
716

கொல்லை யேற்றுக் கொடியொடு பொன்மலை
வில்லை யேற்றுடை யான்விச யமங்கைச்
செல்வ போற்றியென் பாருக்குத் தென்றிசை
எல்லை யேற்றலும் இன்சொலு மாகுமே.

5.71.6
717

கண்பல் உக்கக் கபாலம்அங் கைக்கொண்டு
உண்ப லிக்குழல் உத்தம னுள்ளொளி
வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை
நண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே.

5.71.7
718

பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து
வேண்டு நல்வரங் கொள்விச யமங்கை
ஆண்ட வன்னடி யேநினைந் தாசையாற்
காண்ட லேகருத் தாகி யிருப்பனே.

5.71.8
719

வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்
வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான்
சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப்
பந்து வாக்கி உயக்கொளுங் காண்மினே.

5.71.9
720

இலங்கை வேந்தன் இருபது தோளிற
விலங்கள் சேர்விர லான்விச யமங்கை
வலஞ்செய் வார்களும் வாழ்த்திசைப் பார்களும்
நலஞ்செய் வாரவர் நன்னெறி நாடியே.

5.72.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - விசையநாதேசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page