5.70 திருக்கொண்டீச்சரம் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

701

கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால்
மண்டி யேச்சுணு மாதரைச் சேராதே
சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவக்
கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே.

5.70.1
702

சுற்ற முந்துணை நன்மட வாளொடு
பெற்ற மக்களும் பேண லொழிந்தனர்
குற்ற மில்புகழ்க் கொண்டீச் சுரவனார்
பற்ற லாலொரு பற்றுமற் றில்லையே.

5.70.2
703

மாடு தானது வில்லெனின் மானிடர்
பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற்
கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப்
பாடு மின்பர லோகத் திருத்துமே.

5.70.3
704

தந்தை தாயொடு தார மெனுந்தளைப்
பந்த மாங்கறுத் துப்பயில் வெய்திய
கொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச்
சிந்தை செய்ம்மின் அவனடி சேரவே.

5.70.4
705

கேளு மின்னிள மையது கேடுவந்
தீளை யோடிரு மல்லது வெய்தன்முன்
கோள ராவணி கொண்டீச் சுரவனை
நாளு மேத்தித் தொழுமின்நன் காகுமே.

5.70.5
706

வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்ப முந்துய ரும்மெனுஞ் சூழ்வினை
கொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை
எம்பி ரானென வல்லவர்க் கில்லையே.

5.70.6
707

அல்ல லோடரு நோயில் அழுந்திநீர்
செல்லு மாநினை யாதே கனைகுரற்
கொல்லை யேறுடைக் கொண்டீச் சுரவனை
வல்ல வாறு தொழவினை மாயுமே.

5.70.7
708

நாறு சாந்தணி நன்முலை மென்மொழி
மாறி லாமலை மங்கையோர் பாகமாக்
கூற னாருறை கொண்டீச் சுரநினைந்
தூறு வார்தமக் கூனமொன் றில்லையே.

5.70.8
709

அயிலார் அம்பெரி மேருவில் லாகவே
எயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன்
குயிலா ரும்பொழிற் கொண்டீச் சுரவனைப்
பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே.

5.70.9
710

நிலையி னார்வரை நின்றெடுத் தான்றனை
மலையி னாலடர்த் துவிறல் வாட்டினான்
குலையி னார்பொழிற் கொண்டீச் சுரவனைத்
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.

5.70.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீச்சுவரர், தேவியார் - சாந்தநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page