5.67 திருவாஞ்சியம் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

674

படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்
உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம்
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே.

5.67.1
675

பறப்பை யும்பசு வும்படுத் துப்பல
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே.

5.67.2
676

புற்றி லாடர வோடு புனல்மதி
தெற்று செஞ்சடைத் தேவர் பிரான்பதி
சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க் குப்பாவ மில்லையே.

5.67.3
677

அங்க மாறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்
செங்கண் மாலிட மார்திரு வாஞ்சியந்
தங்கு வார்நம் மமரர்க் கமரரே.

5.67.4
678

நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை
ஆறு சூடும் அடிகள் உறைபதி
மாறு தானொருங் கும்வயல் வாஞ்சியந்
தேறி வாழ்பவர்க் குச்செல்வ மாகுமே.

5.67.5
679

அற்றுப் பற்றின்றி யாரையு மில்லவர்க்
குற்ற நற்றுணை யாவான் உறைபதி
தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியங்
கற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே.

5.67.6
680

அருக்கன் அங்கி நமனொடு தேவர்கள்
திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர்
ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம்
அருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே.

5.67.7

இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

5.67.8-10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுகவாஞ்சிநாதர், தேவியார் - வாழவந்தஅம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page