|
664 |
ஓத மார்கட லின்விட முண்டவன்
பூத நாயகன் பொற்கயி லைக்கிறை
மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப்
பாத மேத்தப் பறையுநம் பாவமே. | 5.66.1 |
665 | கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம்
எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன்
மயில்க ளாலும் வலஞ்சுழி யீசனைப்
பயில்கி லார்சிலர் பாவித் தொழும்பரே. | 5.66.2
|
666 | இளைய காலமெம் மானை யடைகிலாத்
துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல்
வளையுங் காலம் வலஞ்சுழி யீசனைக்
களைக ணாகக் கருதிநீர் உய்ம்மினே. | 5.66.3
|
667 | நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்காய்க்
குறைவி லாக்கொடுங் கூற்றுதைத் திட்டவன்
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய
இறைவ னையினி என்றுகொல் காண்பதே. | 5.66.4
|
668 | விண்ட வர்புர மூன்று மெரிகொளத்
திண்டி றற்சிலை யாலெரி செய்தவன்
வண்டு பண்முர லுந்தண் வலஞ்சுழி
அண்ட னுக்கடி மைத்திறத் தாவனே. | 5.66.5
|
669 | படங்கொள் பாம்பொடு பான்மதி யஞ்சடை
அடங்க வாழவல் லானும்பர் தம்பிரான்
மடந்தை பாகன் வலஞ்சுழி யானடி
அடைந்த வர்க்கடி மைத்திறத் தாவனே. | 5.66.6
|
670 | நாக்கொண் டுபர வும்மடி யார்வினை
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன்
மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன்றன்
ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே. | 5.66.7
|
671 | தேடு வார்பிர மன்திரு மாலவர்
ஆடு பாத மவரும் அறிகிலார்
மாட வீதி வலஞ்சுழி யீசனைத்
தேடு வானுறு கின்றதென் சிந்தையே. | 5.66.8
|
672 | கண்ப னிக்குங் கைகூப்புங் கண்மூன்றுடை
நண்ப னுக்கெனை நான்கொடுப் பேனெனும்
வண்பொ னித்தென் வலஞ்சுழி மேவிய
பண்ப னிப்பொனைச் செய்த பரிசிதே. | 5.66.9
|
673 | இலங்கை வேந்தன் இருபது தோளிற
நலங்கொள் பாதத் தொருவிர லூன்றினான்
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலங்கொள் வாரடி யென்றலை மேலவே. | 5.66.10
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வலஞ்சுழிநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.