|
653 |
பூவ னூர்ப்புனி தன்றிரு நாமந்தான்
நாவின் நூறுநூ றாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே. | 5.65.1 |
654 | என்ன னென்மனை எந்தையெ னாருயிர்
தன்னன் றன்னடி யேன்றனமாகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்
இன்ன னென்றறி வொண்ணான் இயற்கையே. | 5.65.2
|
655 | குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர்
மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம்
புற்ற ராவினன் பூவனூர் ஈசன்பேர்
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே. | 5.65.3
|
656 | ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான்
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப்
பூவ னூர்புகு வார்வினை போகுமே. | 5.65.4
|
657 | புல்ல மூர்தியூர் பூவனூர் பூம்புனல்
நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளியூர்
தில்லை யூர்திரு வாரூர் சீர்காழிநல்
வல்ல மூரென வல்வினை மாயுமே. | 5.65.5
|
658 | அனுச யப்பட்ட துவிது வென்னாதே
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்
புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார்
மனித ரிற்றலை யான மனிதரே. | 5.65.6
|
659 | ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன்
வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர்
பாதி யானான் பரந்த பெரும்படைப்
பூத நாதன்தென் பூவனூர் நாதனே. | 5.65.7
|
660 | பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில்
நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங்
கோவ லூர்குட வாயில் கொடுமுடி
மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே. | 5.65.8
|
661 | ஏவ மேது மிலாவம ணேதலர்
பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான்
தேவ தேவன் திருநெறி யாகிய
பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே. | 5.65.9
|
662 | நார ணன்னொடு நான்முகன் இந்திரன்
வார ணன்கும ரன்வணங் குங்கழற்
பூர ணன்திருப் பூவனூர் மேவிய
கார ணன்னெனை யாளுடைக் காளையே. | 5.65.10
|
663 | மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை
புக்கெ டுத்தலும் பூவனூ ரன்னடி
மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும்
பக்க டுத்தபின் பாடியுய்ந் தானன்றே. | 5.65.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புஷ்பவனநாதர் தேவியார் - கற்பகவல்லியம்மை.