5.62 திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

621

ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும்
அருத்த னையடி யேன்மனத் துள்ளமர்
கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய
திருத்த னைப்புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே.

5.62.1
622

யாவ ருமறி தற்கரி யான்றனை
மூவ ரின்முத லாகிய மூர்த்தியை
நாவின் நல்லுரை யாகிய நாதனைத்
தேவனைப் புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே.

5.62.2
623

அன்ப னையடி யாரிடர் நீக்கியைச்
செம்பொ னைத்திக ழுந்திருக் கச்சியே
கம்ப னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
நம்ப னைக்கண்டு நானுய்யப் பெற்றேனே.

5.62.3
624

மாத னத்தைமா தேவனை மாறிலாக்
கோத னத்திலைந் தாடியை வெண்குழைக்
காத னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
நாத னைக்கண்டு நானுய்யப் பெற்றேனே.

5.62.4
625

குண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட்
கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக்
கண்ட னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
அண்ட னைக்கண் டருவினை யற்றேனே.

5.62.5
626

பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட
மைந்த னைம்மண வாளனை மாமலர்க்
கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே.

5.62.6
627

உம்ப ரானை உருத்திர மூர்த்தியை
அம்ப ரானை அமலனை ஆதியைக்
கம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
எம்பி ரானைக்கண் டின்பம தாயிற்றே.

5.62.7
628

மாசார் பாச மயக்கறு வித்தெனுள்
நேச மாகிய நித்த மணாளனைப்
பூச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
ஈச னேயென இன்பம தாயிற்றே.

5.62.8
629

இடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு
கடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே
கடுவாய்த் தென்கரைப் புத்தூ ரடிகட்காட்
படவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தேனே.

5.62.9
630

அரக்க னாற்றல் அழித்தவன் பாடல்கேட்
டிரக்க மாகி அருள்புரி யீசனைத்
திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தேனே.

5.62.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொர்ணபுரீசுவரர், தேவியார் - சொர்ணபுரிநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page