5.61 திருஅரிசிற்கரைப்புத்தூர் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

611

முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப்
புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம்
பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கிய
மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே.

5.61.1
612

பிறைக்க ணிச்சடை யெம்பெரு மானென்று
கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய்
உறக்க ணித்துரு காமனத் தார்களைப்
புறக்க ணித்திடும் புத்தூர்ப் புனிதரே.

5.61.2
613

அரிசி லின்கரை மேலணி யார்தரு
புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொ டும்பர விப்பணி வார்க்கெலாந்
துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே.

5.61.3
614

வேத னைமிகு வீணையின் மேவிய
கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம்
போத னைப்புனல் சூழ்ந்தபுத் தூரனை
நாத னைந்நினைந் தென்மனம் நையுமே.

5.61.4
615

அருப்புப் போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல்
விருப்புச் சேர்நிலை விட்டுநல் லிட்டமாய்
திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக்
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே.

5.61.5
616

பாம்பொ டுமதி யும்படர் புன்சடைப்
பூம்பு னலும்பொ திந்தபுத் தூருளான்
நாம்ப ணிந்தடி போற்றிட நாடொறுஞ்
சாம்பல் என்பு தனக்கணி யாகுமே.

5.61.6
617

கனலங் கைதனி லேந்திவெங் காட்டிடை
அனலங் கெய்திநின் றாடுவர் பாடுவர்
பினலஞ் செஞ்சடை மேற்பிறை யுந்தரு
புனலுஞ் சூடுவர் போலும்புத் தூரரே.

5.61.7
618

காற்றி னுங்கடி தாகி நடப்பதோர்
ஏற்றி னும்மிசைந் தேறுவர் என்பொடு
நீற்றி னையணி வர்நினை வாய்த்தமைப்
போற்றி யென்பவர்க் கன்பர்புத் தூரரே.

5.61.8
619

முன்னு முப்புரஞ் செற்றன ராயினும்
அன்ன மொப்பர் அலந்தடைந் தார்க்கெலாம்
மின்னு மொப்பர் விரிசடை மேனிசெம்
பொன்னு மொப்பர்புத் தூரெம் புனிதரே.

5.61.9
620

செருத்த னாற்றன தேர்செல வுய்த்திடுங்
கருத்த னாய்க்கயி லையெடுத் தானுடல்
பருத்த தோள்கெடப் பாதத் தொருவிரல்
பொருத்தி னார்பொழி லார்ந்தபுத் தூரரே.

5.61.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - படிக்காசுவைத்தநாதர், தேவியார் - அழகாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page