5.58 திருப்பழையாறைவடதளி - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

583

தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழி லாறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.

5.58.1
584

மூக்கி னால்முரன் றோதியக் குண்டிகை
தூக்கி னார்குலந் தூரறுத் தேதனக்
காக்கி னானணி யாறை வடதளி
நோக்கி னார்க்கில்லை யாலரு நோய்களே.

5.58.2

585

குண்ட ரைக்குண மில்லரைக் கூறையில்
மிண்ட ரைத்துரந் தவிம லன்றனை
அண்ட ரைப்பழை யாறை வடதளிக்
கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே.

5.58.3
586

முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரை
கடைய ரைக்கடிந் தார்கனல் வெண்மழுப்
படைய ரைப்பழை யாறை வடதளி
உடைய ரைக்குளிர்ந் துள்குமென் உள்ளமே.

5.58.4
587

ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணுங்
கள்ள ரைக்கடிந் தகருப் பூறலை
அள்ள லம்புன லாறை வடதளி
வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே.

5.58.5
588

நீதி யைக்கெட நின்றம ணேயுணுஞ்
சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன்
ஆதி யைப்பழை யாறை வடதளிச்
சோதி யைத்தொழு வார்துயர் தீருமே.

5.58.6
589

திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண்
பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை
அருட்டி றத்தணி யாறை வடதளித்
தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே.

5.58.7
590

ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண்
*வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை
பாத னைப்பழை யாறை வடதளி
நாத னைத்தொழ நம்வினை நாசமே.
* வேது என்பது - வெப்பம்.

5.58.8
591

வாயி ருந்தமி ழேபடித் தாளுறா
ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான்
பாயி ரும்புன லாறை வடதளி
மேய வன்னென வல்வினை வீடுமே.

5.58.9
592

செருத்த னைச்செயுஞ் சேணரக் கன்னுடல்
எருத்தி றவிர லாலிறை யூன்றிய
அருத்த னைப்பழை யாறை வடதளித்
திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே.

5.58.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சோமேசுவரர், தேவியார் - சோமகலாநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page