5.54 திருவதிகைவீரட்டம் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

543

எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்ட லரிடு வார்வினை மாயுமாற்
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ
ரட்ட னாரடி சேரு மவருக்கே.

5.54.1
544

நீள மாநினைந் தெண்மலர் இட்டவர்
கோள வல்வினை யுங்குறை விப்பரால்
வாள மாலிழி யுங்கெடி லக்கரை
வேளி சூழ்ந்தழ காய வீரட்டரே.

5.54.2
545

கள்ளின் நாண்மல ரோரிரு நான்குகொண்
டுள்குவா ரவர் வல்வினை யோட்டுவார்
தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை
வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே.

5.54.3
546

பூங்கொத் தாயின மூன்றொடோ ரைந்திட
வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார்
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை
வேங்கைத் தோலுடை யாடைவீ ரட்டரே.

5.54.4
547

தேனப் போதுகள் மூன்றொடோ ரைந்துடன்
தானப் போதிடு வார்வினை தீர்ப்பவர்
மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேன லானை யுரித்தவீ ரட்டரே.

5.54.5
548

ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை யோட அகற்றுவார்
பாழித் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேழத் தின்னுரி போர்த்தவீ ரட்டரே.

5.54.6
549

உரைசெய் நூல்வழி யொண்மல ரெட்டிடத்
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை
விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே.

5.54.7
550

ஓலி வண்டறை யொண்மல ரெட்டினாற்
காலை யேத்த வினையைக் கழிப்பரால்
ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை
வேலி சூழ்ந்தழ காயவீ ரட்டரே.

5.54.8
551

தாரித் துள்ளித் தடமல ரெட்டினாற்
பாரித் தேத்தவல் லார்வினை பாற்றுவார்
மூரித் தெண்டிரை பாய்கெடி லக்கரை
வேரிச் செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே.

5.54.9
552

அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண்
டட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந்
தட்டு மாறுசெய் கிற்ப அதிகைவீ
ரட்ட னாரடி சேரு மவர்களே.

5.54.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page