5.48 திருவேகம்பம் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

479

பூமே லானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவ ரெனாமை நடுக்குறத்
தீமே வும்முரு வாதிரு வேகம்பா
ஆமோ அல்லற் படவடி யோங்களே.

5.48.1
480

அருந்தி றல்அம ரர்அயன் மாலொடு
திருந்த நின்று வழிபடத் தேவியோ
டிருந்த வன்னெழி லார்கச்சி யேகம்பம்
பொருந்தச் சென்று புடைபட் டெழுதுமே.

5.48.2
481

கறைகொள் கண்டத்தெண் டோ ளிறை முக்கணன்
மறைகொள் நாவினன் வானவர்க் காதியான்
உறையும் பூம்பொழில் சூழ்கச்சி யேகம்பம்
முறைமை யாற்சென்று முந்தித் தொழுதுமே.

5.48.3
482

பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை
நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு றும்மமு தாயவன் ஏகம்பம்
குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே.

5.48.4
483

சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோ
டந்தி யாய்அன லாய்ப்புனல் வானமாய்
புந்தி யாய்ப்புகுந் துள்ளம் நிறைந்தவெம்
எந்தை யேகம்பம் ஏத்தித் தொழுமினே.

5.48.5
484

சாக்கி யத்தொடு மற்றுஞ் சமண்படும்
பாக்கி யம்மிலார் பாடு செலாதுறப்
பூக்கொள் சேவடி யான்கச்சி யேகம்பம்
நாக்கொ டேத்தி நயந்து தொழுதுமே.

5.48.6
485

மூப்பி னோடு முனிவுறுத் தெந்தமை
ஆர்ப்ப தன்முன் னணிஅம ரர்க்கிறை
காப்ப தாய கடிபொழில் ஏகம்பம்
சேர்ப்ப தாகநாஞ் சென்றடைந் துய்துமே.

5.48.7
486

ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடுஞ்
சால நீயுறு மால்தவிர் நெஞ்சமே
நீல மாமிடற் றண்ணலே கம்பனார்
கோல மாமலர்ப் பாதமே கும்பிடே.

5.48.8
487

பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்திய
கைய னைக்கச்சி யேகம்பம் மேவிய
ஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே.

5.48.9
488

அரக்கன் றன்வலி உன்னிக் கயிலையை
நெருக்கிச் சென்றெடுத் தான்முடி தோள்நெரித்
திரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பந்
தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே.

5.48.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page