|
458 |
துன்னக் கோவணச் சுண்ணவெண் ணீறணி
பொன்னக் கன்ன சடைப்புக லூரரோ
மின்னக் கன்னவெண் டிங்களைப் பாம்புடன்
என்னுக் கோவுடன் வைத்திட் டிருப்பதே. | 5.46.1 |
459 | இரைக்கும் பாம்பு மெறிதரு திங்களும்
நுரைக்குங் கங்கையும் நுண்ணிய செஞ்சடைப்
புரைப்பி லாத பொழிற்புக லூரரை
உரைக்கு மாசொல்லி ஒள்வளை சோருமே. | 5.46.2
|
460 | ஊச லாம்அர வல்குலென் சோர்குழல்
ஏச லாம்பழி தந்தெழில் கொண்டனர்
ஓசொ லாய்மக ளேமுறை யோவென்று
பூசல் நாமிடு தும்புக லூரர்க்கே. | 5.46.3
|
461 | மின்னின் நேரிடை யாளுமை பங்கனைத்
தன்னை நேரொப் பிலாத தலைவனைப்
புன்னைக் கானற் பொழில்புக லூரனை
என்னு ளாகவைத் தின்புற் றிருப்பனே. | 5.46.4
|
462 | விண்ணி னார்மதி சூடிய வேந்தனை
எண்ணி நாமங்கள் ஓதி எழுத்தஞ்சுங்
கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனிற்
புண்ணி யன்புக லூருமென் நெஞ்சுமே. | 5.46.5
|
463 | அண்ட வாணர் அமுதுண நஞ்சுண்டு
பண்டு நான்மறை யோதிய பாடலன்
தொண்ட ராகித் தொழுது மதிப்பவர்
புண்ட ரீகத்து ளார்புக லூரரே. | 5.46.6
|
464 | தத்து வந்தலை கண்டறி வாரிலை
தத்து வந்தலை கண்டவர் கண்டிலர்
தத்து வந்தலை நின்றவர்க் கல்லது
தத்து வன்னலன் தண்புக லூரனே. | 5.46.7
|
465 | பெருங்கை யாகிப் பிளிறி வருவதோர்
கருங்கை யானைக் களிற்றுரி போர்த்தவர்
வருங்கை யானை மதகளி றஞ்சினைப்
பொருங்கை யானைகண் டீர்புக லூரரே. | 5.46.8
|
466 | பொன்னொத் தநிறத் தானும் பொருகடல்
தன்னொத் தநிறத் தானும் அறிகிலாப்
புன்னைத் தாது பொழிற்புக லூரரை
என்னத் தாவென என்னிடர் தீருமே. | 5.46.9
|
467 | மத்த னாய்மதி யாது மலைதனை
எத்தி னான்றிரள் தோள்முடி பத்திற
ஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும்
பொத்தி னான்புக லூரைத் தொழுமினே. | 5.46.10
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர், தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.