|
427 |
கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்
இல்லத் தார்செய்ய லாவதென் ஏழைகாள்
நல்லத் தான்நமை யாளுடை யான்கழல்
சொல்லத் தான்வல்லி ரேற்றுயர் தீருமே. | 5.43.1 |
428 | பொக்கம் பேசிப் பொழுது கழியாதே
துக்கந் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே. | 5.43.2
|
429 | பிணிகொள் வார்குழற் பேதையர் காதலாற்
பணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள்
அணுக வேண்டில் அரனெறி யாவது
நணுகு நாதன் நகர்திரு நல்லமே. | 5.43.3
|
430 | தமக்கு நல்லது தம்முயிர் போயினால்
இமைக்கும் போதும் இராதிக் குரம்பைதான்
உமைக்கு நல்லவன் றானுறை யும்பதி
நமக்கு நல்லது நல்ல மடைவதே. | 5.43.4
|
431 | உரைத ளர்ந்துட லார்நடுங் காமுனம்
நரைவி டையுடை யானிடம் நல்லமே
பரவு மின்பணி மின்பணி வாரொடே
விரவு மின்விர வாரை விடுமினே. | 5.43.5
|
432 | அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும்
வல்ல வாறு சிவாய நமவென்று
நல்லம் மேவிய நாத னடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே. | 5.43.6
|
433 | மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும்
பேத மாகிப் பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய நல்லம் நகர்தொழப்
போது மின்னெழு மின்புக லாகுமே. | 5.43.7
|
434 | வெம்மை யான வினைக்கடல் நீங்கிநீர்
செம்மை யாய சிவகதி சேரலாஞ்
சும்மை யார்மலர் தூவித் தொழுமினோ
நம்மை யாளுடை யானிடம் நல்லமே. | 5.43.8
|
435 | கால மான கழிவதன் முன்னமே
ஏலு மாறு வணங்கிநின் றேத்துமின்
மாலும் மாமல ரானொடு மாமறை
நாலும் வல்லவர் கோனிடம் நல்லமே. | 5.43.9
|
436 | மல்லை மல்கிய தோளரக் கன்வலி
ஒல்லை யில்லொழித் தானுறை யும்பதி
நல்ல நல்லம் எனும்பெயர் நாவினாற்
சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே. | 5.43.10
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - உமாமகேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.