|
417 |
நன்று நாடொறும் நம்வினை போயறும்
என்று மின்பந் தழைக்க இருக்கலாஞ்
சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே. | 5.42.1 |
418 | கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
திருப்ப னாகில் எனக்கிட ரில்லையே. | 5.42.2
|
419 | வேட்க ளத்துறை வேதியன் எம்மிறை
ஆக்க ளேறுவர் ஆனைஞ்சு மாடுவர்
பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே. | 5.42.3
|
420 | அல்ல லில்லை அருவினை தானில்லை
மல்கு வெண்பிறை சூடு மணாளனார்
செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
வல்ல ராகில் வழியது காண்மினே. | 5.42.4
|
421 | துன்ப மில்லை துயரில்லை யாமினி
நம்ப னாகிய நன்மணி கண்டனார்
என்பொ னாருறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே. | 5.42.5
|
422 | கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
பட்ட வல்வினை யாயின பாறுமே. | 5.42.6
|
423 | வட்ட மென்முலை யாளுமை பங்கனார்
எட்டு மொன்றும் இரண்டுமூன் றாயினார்
சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு
திட்ட மாகி யிருமட நெஞ்சமே. | 5.42.7
|
424 | நட்ட மாடிய நம்பனை நாடொறும்
இட்டத் தாலினி தாக நினைமினோ
வட்ட வார்முலை யாளுமை பங்கனார்
சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே. | 5.42.8
|
425 | வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ்
சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே. | 5.42.9
|
426 | சேட னாருறை யுஞ்செழு மாமலை
ஓடி யாங்கெடுத் தான்முடி பத்திற
வாட வூன்றி மலரடி வாங்கிய
வேட னாருறை வேட்களஞ் சேர்மினே. | 5.42.10
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசுபதேசுவரர், தேவியார் - நல்லநாயகியம்மை.