5.40 திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

398

வண்ண மும்வடி வுஞ்சென்று கண்டிலள்
எண்ணி நாமங்க ளேத்தி நிறைந்திலள்
கண்ணு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்
அண்ண லேயறி வானிவள் தன்மையே.

5.40.1
399

மருந்து வானவர் உய்யநஞ் சுண்டுகந்
திருந்த வன்கழிப் பாலையுள் எம்பிரான்
திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள்
பரிந்து ரைக்கிலு மென்சொற் பழிக்குமே.

5.40.2
400

மழலை தான்வரச் சொற்றெரி கின்றிலள்
குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ
அழக னேகழிப் பாலையெம் மண்ணலே
இகழ்வ தோயெனை ஏன்றுகொ ளென்னுமே.

5.40.3
401

செய்ய மேனிவெண் ணீறணி வான்றனை
மைய லாகி மதிக்கில ளாரையுங்
கைகொள் வெண்மழு வன்கழிப் பாலையெம்
ஐய னேஅறி வானிவள் தன்மையே.

5.40.4
402

கருத்த னைக்கழிப் பாலையுள் மேவிய
ஒருத்த னையுமை யாளொரு பங்கனை
அருத்தி யாற்சென்று கண்டிட வேண்டுமென்
றொருத்தி யாருளம் ஊசல தாகுமே.

5.40.5
403

கங்கை யைச்சடை வைத்து மலைமகள்
நங்கை யையுட னேவைத்த நாதனார்
திங்கள் சூடித் திருக்கழிப் பாலையான்
இங்கு வந்திடு மென்றிறு மாக்குமே.

5.40.6
404

ஐய னேஅழ கேஅன லேந்திய
கைய னேகறை சேர்தரு கண்டனே
மையு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்
ஐய னேவிதி யேஅரு ளென்னுமே.

5.40.7
405

பத்தர் கட்கமு தாய பரத்தினை
முத்த னைமுடி வொன்றிலா மூர்த்தியை
அத்த னைஅணி யார்கழிப் பாலையெஞ்
சித்த னைச்சென்று சேருமா செப்புமே.

5.40.8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

5.40.9
406

பொன்செய் மாமுடி வாளரக் கன்றலை
அஞ்சு நான்குமொன் றும்மிறுத் தானவன்
என்செ யான்கழிப் பாலையு ளெம்பிரான்
துஞ்சும் போதுந் துணையென லாகுமே.

5.40.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ண நாதர், தேவியார் - வேதநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page