|
387 |
கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளை
உள்ளம் உள்கி யுரைக்குந் திருப்பெயர்
வள்ளல் மாமயி லாடு துறையுறை
வெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே. | 5.39.1 |
388 | சித்தந் தேறுஞ் செறிவளை சிக்கெனும்
பச்சை தீருமென் பைங்கொடி பான்மதி
வைத்த மாமயி லாடு துறையரன்
கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே. | 5.39.2
|
389 | அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையுங்
கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம்
வண்டு சேர்மயி லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே. | 5.39.3
|
390 | வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்கன் அருளிலே. | 5.39.4
|
391 | குறைவி லோங்கொடு மானிட வாழ்க்கையாற்
கறைநி லாவிய கண்டனெண் டோ ளினன்
மறைவ லான்மயி லாடு துறையுறை
இறைவன் நீள்கழ லேத்தி யிருக்கிலே. | 5.39.5
|
392 | நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய்
கலைக ளாயவல் லான்கயி லாயநன்
மலையன் மாமயி லாடு துறையன்நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே. | 5.39.6
|
393 | நீற்றி னான்நிமிர் புன்சடை யான்விடை
ஏற்றி னான்நமை யாளுடை யான்புலன்
மாற்றி னான்மயி லாடு துறையென்று
போற்று வார்க்குமுண் டோ புவி வாழ்க்கையே. | 5.39.7
|
394 | கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமுந்
தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
நீல மாமயி லாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே. | 5.39.8
|
395 | பணங்கொ ளாடர வல்குற் பகீரதி
மணங்கொ ளச்சடை வைத்த மறையவன்
வணங்கு மாமயி லாடு துறையரன்
அணங்கோர் பால்கொண்ட கோலம் அழகிதே. | 5.39.9
|
396 | நீணி லாவர வச்சடை நேசனைப்
பேணி லாதவர் பேதுற வோட்டினோம்
வாணி லாமயி லாடு துறைதனைக்
காணி லார்க்குங் கடுந்துய ரில்லையே. | 5.39.10
|
397 | பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தி னானவன் இன்னிசை கேட்டலும்
வரத்தி னான்மயி லாடு துறைதொழுங்
கரத்தி னார்வினைக் கட்டறுங் காண்மினே. | 5.39.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாயூரநாதர், தேவியார் - அஞ்சொல்நாயகி.