|
379 |
குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாங்கட வூரின் மயானத்தார்
பழைய தம்மடி யார்செயும் பாவமும்
பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே. | 5.38.1 |
380 | உன்னி வானவர் ஓதிய சிந்தையிற்
கன்னல் தேன்கட வூரின் மயானத்தார்
தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம்
பின்னை என்னார் பெருமா னடிகளே. | 5.38.2
|
381 | சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
ஆல முண்டமு தேமிகத் தேக்குவர்
கால காலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமா னடிகளே. | 5.38.3
|
382 | இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல்
மறவ னார்கட வூரின் மயானத்தார்
அறவ னாரடி யாரடி யார்தங்கள்
பிறவி தீர்ப்பர் பெருமா னடிகளே. | 5.38.4
|
383 | கத்து காளி கதந்தணி வித்தவர்
மத்தர் தாங்கட வூரின் மயானத்தார்
ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு
பித்தர் காணும் பெருமா னடிகளே. | 5.38.5
|
384 | எரிகொள் மேனி இளம்பிறை வைத்தவர்
கரியர் தாங்கட வூரின் மயானத்தார்
அரியர் அண்டத்து ளோரயன் மாலுக்கும்
பெரியர் காணும் பெருமா னடிகளே. | 5.38.6
|
385 | அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை
கணங்கள் சேர்கட வூரின் மயானத்தார்
வணங்கு வாரிடர் தீர்ப்பர் மயக்குறும்
பிணங்கொள் காடர் பெருமா னடிகளே. | 5.38.7
|
386 | அரவு கையினர் ஆதி புராணனார்
மரவு சேர்கட வூரின் மயானத்தார்
பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வார்
பிரமன் மாற்கும் பெருமா னடிகளே. | 5.38.8
|
| இப்பதிகத்தில் 9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. | 5.38.9-10
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழன்மின்னம்மை.