|
368 |
மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை
நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலாற்
கலைக்கை யானைகண் டீர்கட வூரரே. | 5.37.1 |
369 | வெள்ளி மால்வரை போல்வதோ ரானையார்
உள்ள வாறெனை உள்புகு மானையார்
கொள்ள மாகிய கோயிலு ளானையார்
கள்ள வானைகண் டீர்கட வூரரே. | 5.37.2
|
370 | ஞான மாகிய நன்குண ரானையார்
ஊனை வேவ வுருக்கிய ஆனையார்
வேன லானை யுரித்துமை அஞ்சவே
கான லானைகண் டீர்கட வூரரே. | 5.37.3
|
371 | ஆல முண்டழ காயதோ ரானையார்
நீல மேனி நெடும்பளிங் கானையார்
கோல மாய கொழுஞ்சுட ரானையார்
கால வானைகண் டீர்கட வூரரே. | 5.37.4
|
372 | அளித்த ஆனஞ்சு மாடிய வானையார்
வெளுத்த நீள்கொடி யேறுடை யானையார்
எளித்த வேழத்தை எள்குவித் தானையார்
களித்த வானைகண் டீர்கட வூரரே. | 5.37.5
|
373 | விடுத்த மால்வரை விண்ணுற வானையார்
தொடுத்த மால்வரை தூயதோ ரானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததோ ரானையார்
கடுத்த வானைகண் டீர்கட வூரரே. | 5.37.6
|
374 | மண்ணு ளாரை மயக்குறு மானையார்
எண்ணு ளார்பல ரேத்திடு மானையார்
விண்ணு ளார்பல ரும்மறி யானையார்
கண்ணு ளானைகண் டீர்கட வூரரே. | 5.37.7
|
375 | சினக்குஞ் செம்பவ ளத்திர ளானையார்
மனக்கும் வல்வினை தீர்த்திடு மானையார்
அனைக்கும் அன்புடை யார்மனத் தானையார்
கனைக்கு மானைகண் டீர்கட வூரரே. | 5.37.8
|
376 | வேத மாகிய வெஞ்சுட ரானையார்
நீதி யானில னாகிய வானையார்
ஓதி யூழி தெரிந்துண ரானையார்
காத லானைகண் டீர்கட வூரரே. | 5.37.9
|
377 | நீண்ட மாலொடு நான்முகன் றானுமாய்க்
காண்டு மென்றுபுக் கார்க ளிருவரும்
மாண்ட வாரழ லாகிய வானையார்
காண்ட லானைகண் டீர்கட வூரரே. | 5.37.10
|
378 | அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்கள் இறநெரித் தானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததோ ரானையார்
கடுக்கை யானைகண் டீர்கட வூரரே. | 5.37.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர், தேவியார் - அபிராமியம்மை.