5.35 திருப்பழனம் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

348

அருவ னாய்அத்தி ஈருரி போர்த்துமை
உருவ னாய்ஒற்றி யூர்பதி யாகிலும்
பருவ ரால்வயல் சூழ்ந்த பழனத்தான்
திருவி னாற்றிரு வேண்டுமித் தேவர்க்கே.

5.35.1
349

வையம் வந்து வணங்கி வலங்கொளும்
ஐய னைஅறி யார்சிலர் ஆதர்கள்
பைகொ ளாடர வார்த்த பழனன்பால்
பொய்யர் காலங்கள் போக்கிடு வார்களே.

5.35.2
350

வண்ண மாக முறுக்கிய வாசிகை
திண்ண மாகத் திருச்சடைச் சேர்த்தியே
பண்ணு மாகவே பாடும் பழனத்தான்
எண்ணும் நீரவன் ஆயிர நாமமே.

5.35.3
351

மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட
வாக்கப் பாம்பினைக் கண்ட துணிமதி
பாக்கப் பாம்பினைப் பற்றும் பழனத்தான்
தார்க்கொண் மாலை சடைக்கரந் திட்டதே.

5.35.4
352

நீல முண்ட மிடற்றினன் நேர்ந்ததோர்
கோல முண்ட குணத்தான் நிறைந்ததோர்
பாலு முண்டு பழனன்பா லென்னிடை
மாலு முண்டிறை யென்றன் மனத்துளே.

5.35.5
353

மந்த மாக வளர்பிறை சூடியோர்
சந்த மாகத் திருச்சடை சாத்துவான்
பந்த மாயின தீர்க்கும் பழனத்தான்
எந்தை தாய்தந்தை எம்பெரு மானுமே.

5.35.6
354

மார்க்க மொன்றறி யார்மதி யில்லிகள்
பூக்க ரத்திற் புரிகிலர் மூடர்கள்
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
தாட்கண் நின்று தலைவணங் கார்களே.

5.35.7
355

ஏறி னாரிமை யோர்கள் பணிகண்டு
தேறு வாரலர் தீவினை யாளர்கள்
பாறி னார்பணி வேண்டும் பழனத்தான்
கூறி னானுமை யாளொடுங் கூடவே.

5.35.8
356

சுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல்
தெற்றி னார்திரி யும்புர மூன்றெய்தான்
பற்றி னார்வினை தீர்க்கும் பழனனை
எற்றி னான்மறக் கேனெம் பிரானையே.

5.35.9
357

பொங்கு மாகடல் சூழ்இலங் கைக்கிறை
அங்க மான இறுத்தருள் செய்தவன்
பங்க னென்றும் பழனன் உமையொடுந்
தங்கன் றானடி யேனுடை யுச்சியே.

5.35.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page