5.31 திருவானைக்கா - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

307

கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள்
ஆனைக் காவிலெம் மானை அணைகிலார்
ஊனைக் காவி யுழிதர்வர் ஊமரே.

5.31.1
308

திருகு சிந்தையைத் தீர்த்துச்செம் மைசெய்து
பருகி யூறலைப் பற்றிப் பதமறிந்
துருகி நைபவர்க் கூனமொன் றின்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.

5.31.2
309

துன்ப மின்றித் துயரின்றி யென்றுநீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
என்பொன் ஈசன் இறைவனென் றுள்குவார்க்
கன்ப னாயிடும் ஆனைக்கா அண்ணலே.

5.31.3
310

நாவால் நன்று நறுமலர்ச் சேவடி
ஓவா தேத்தி யுளத்தடைத் தார்வினை
காவா யென்றுதங் கைதொழு வார்க்கெலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே.

5.31.4
311

வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொ லின்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சுநின் றுள்குளிர் வார்க்கெலாம்
அஞ்ச லென்றிடும் ஆனைக்கா அண்ணலே.

5.31.5
312

நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.

5.31.6
313

ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலுங்
கழுக ரிப்பதன் முன்னங் கழலடி
தொழுது கைகளாற் றூமலர் தூவிநின்
றழும வர்க்கன்பன் ஆனைக்கா அண்ணலே.

5.317
314

உருளும் போதறி வொண்ணா உலகத்தீர்
தெருளுஞ் சிக்கெனத் தீவினை சேராதே
இருள றுத்துநின் றீசனென் பார்க்கெலாம்
அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே.

5.31.8
315

நேச மாகி நினைமட நெஞ்சமே
நாச மாய குலநலஞ் சுற்றங்கள்
பாச மற்றுப் பராபர ஆனந்த
ஆசை யுற்றிடும் ஆனைக்கா அண்ணலே.

5.31.9
316

ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை
கீதங் கின்னரம் பாடக் கெழுவினான்
பாதம் வாங்கிப் பரிந்தருள் செய்தங்கோர்
ஆதி யாயிடும் ஆனைக்கா அண்ணலே.

5.31.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சம்புகேசுவரர்,
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page