|
266 |
சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன்
பொந்து வார்புலால் வெண்டலைக் கையினன்
முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித்
தந்தி வாயதோர் பாம்பர்ஐ யாறரே. | 5.27.1 |
267 | பாக மாலை மகிழ்ந்தனர் பான்மதி
போக ஆனையின் ஈருரி போர்த்தவர்
கோக மாலை குலாயதோர் கொன்றையும்
ஆக ஆன்நெய்அஞ் சாடும்ஐ யாறரே. | 5.27.2
|
268 | நெஞ்ச மென்பதோர் நீள்கயந் தன்னுளே
வஞ்ச மென்பதோர் வான்சுழிப் பட்டுநான்
துஞ்சும் போழ்துநின் நாமத் திருவெழுத்
தஞ்சுந் தோன்ற அருளும்ஐ யாறரே. | 5.27.3
|
269 | நினைக்கும் நெஞ்சினுள் ளார்நெடு மாமதில்
அனைத்தும் ஒள்ளழல் வாயெரி யூட்டினார்
பனைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
அனைத்து வாய்தலுள் ளாரும்ஐ யாறரே. | 5.27.4
|
270 | பரியர் நுண்ணியர் பார்த்தற் கரியவர்
அரிய பாடலர் ஆடல ரன்றியுங்
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கெலாம்
அரியர் தொண்டர்க் கெளியர்ஐ யாறரே. | 5.27.5
|
271 | புலரும் போது மிலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுக ளாற்பணி யச்சிலர்
இலரும் போதும் இலாதது மன்றியும்
அலரும் போதும் அணியும்ஐ யாறரே. | 5.27.6
|
272 | பங்க மாலைக் குழலியோர் பால்நிறக்
கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை மாலை மதியமுங் கண்ணியும்
அங்க மாலையுஞ் சூடும்ஐ யாறரே. | 5.27.7
|
273 | முன்னை யாறு முயன்றெழு வீரெலாம்
பின்னை யாறு பிரியெனும் பேதைகாள்
மன்னை யாறு மருவிய மாதவன்
தன்னை யாறு தொழத்தவ மாகுமே. | 5.27.8
|
274 | ஆனை யாறென ஆடுகின் றான்முடி
வானை யாறு வளாயது காண்மினோ
நான்ஐ யாறுபுக் கேற்கவன் இன்னருள்
தேனை யாறு திறந்தாலே யொக்குமே. | 5.27.9
|
275 | அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன்
அரக்கின் சேவடி யாளஞ்ச அஞ்சலென்
றரக்கன் ஈரைந்து வாயும் அலறவே
அரக்கி னானடி யாலும்ஐ யாறனே. | 5.27.10
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொற்சோதீசுவரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகி.