5.26 திருவன்னியூர் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

257

காடு கொண்டரங் காக்கங்குல் வாய்க்கணம்
பாட மாநட மாடும் பரமனார்
வாட மானிறங் கொள்வர் மணங்கமழ்
மாட மாமதில் சூழ்வன்னி யூரரே.

5.26.1
258

செங்கண் நாகம் அரையது தீத்திரள்
அங்கை யேந்திநின் றார்எரி யாடுவர்
கங்கை வார்சடை மேலிடங் கொண்டவர்
மங்கை பாகம்வைத் தார்வன்னி யூரரே.

5.26.2
259

ஞானங் காட்டுவர் நன்னெறி காட்டுவர்
தானங் காட்டுவர் தம்மடைந் தார்க்கெலாந்
தானங் காட்டித்தன் றாளடைந் தார்கட்கு
வானங் காட்டுவர் போல்வன்னி யூரரே.

5.26.3
260

இம்மை அம்மை யெனவிரண் டும்மிவை
மெய்ம்மை தானறி யாது விளம்புவர்
மெய்ம்மை யால்நினை வார்கள்தம் வல்வினை
வம்மின் தீர்ப்பர்கண் டீர்வன்னி யூரரே.

5.26.4
261

பிறைகொள் வாணுதற் பெய்வளைத் தோளியர்
நிறையைக் கொள்பவர் நீறணி மேனியர்
கறைகொள் கண்டத்தர் வெண்மழு வாளினர்
மறைகொள் வாய்மொழி யார்வன்னி யூரரே.

5.26.5
262

திளைக்கும் வண்டொடு தேன்படு கொன்றையர்
துளைக்கை வேழத்தர் தோலர் சுடர்மதி
முளைக்கு மூரற் கதிர்கண்டு நாகம்நா
வளைக்கும் வார்சடை யார்வன்னி யூரரே.

5.26.6
263

குணங்கொள் தோளெட்டு மூர்த்தி இணையடி
இணங்கு வார்கட் கினியனு மாய்நின்றான்
வணங்கி மாமலர் கொண்டவர் வைகலும்
வணங்கு வார்மனத் தார்வன்னி யூரரே.

5.26.7
264

இயலு மாலொடு நான்முகன் செய்தவம்
முயலிற் காண்பரி தாய்நின்ற மூர்த்திதான்
அயலெ லாம்அன்ன மேயும்அந் தாமரை
வயலெ லாங்கயல் பாய்வன்னி யூரரே.

5.26.8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

5.26.8
265

நலங்கொள் பாகனை நன்று முனிந்திடா
விலங்கல் கோத்தெடுத் தானது மிக்கிட
இலங்கை மன்னன் இருபது தோளினை
மலங்க வூன்றிவைத் தார்வன்னி யூரரே.

5.26.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page