5.24 திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

236

ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை
ஒற்றி யூருமப் பாம்பும் அதனையே
ஒற்றி யூர வொருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ நம்வினை ஓயுமே.

5.24.1
237

வாட்ட மொன்றுரைக் கும்மலை யான்மகள்
ஈட்ட வேயிரு ளாடி இடுபிணக்
காட்டி லோரி கடிக்க எடுத்ததோர்
ஓட்டை வெண்டலைக் கையொற்றி யூரரே.

5.24.2
238

கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின்
ஆற்றுத் தண்டத் தடக்கு மரனடி
நீற்றுத் தண்டத்த ராய்நினை வார்க்கெலாம்
ஊற்றுத் தண்டொப்பர் போலொற்றி யூரரே.

5.24.3
239

சுற்றும் பேய்சுழ லச்சுடு காட்டெரி
பற்றி யாடுவர் பாய்புலித் தோலினர்
மற்றை யூர்களெல் லாம்பலி தேர்ந்துபோய்
ஒற்றி யூர்புக் குறையும் ஒருவரே.

5.24.4
240

புற்றில் வாளர வாட்டி உமையொடு
பெற்ற மேறுகந் தேறும் பெருமையான்
மற்றை யாரொடு வானவ ருந்தொழ
ஒற்றி யூருறை வானோர் கபாலியே.

5.24.5
241

போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர்
மாது தாழ்சடை வைத்த மணாளனார்
ஓது வேதிய னார்திரு வொற்றியூர்
பாத மேத்தப் பறையுநம் பாவமே.

5.24.6
242

பலவும் அன்னங்கள் பன்மலர் மேற்றுஞ்சுங்
கலவ மஞ்ஞைகள் காரென வெள்குறும்
உலவு பைம்பொழில் சூழ்திரு ஒற்றியூர்
நிலவி னானடி யேயடை நெஞ்சமே.

5.24.7
243

ஒன்று போலும் உகந்தவ ரேறிற்று
ஒன்று போலும் உதைத்துக் களைந்தது
ஒன்று போலொளி மாமதி சூடிற்று
ஒன்று போலுகந் தாரொற்றி யூரரே.

5.24.8
244

படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்
சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் ணீற்றினர்
உடையுந் தோலுகந் தாருறை யொற்றியூர்
அடையு முள்ளத் தவர்வினை யல்குமே.

5.24.9
245

வரையி னாருயர் தோலுடை மன்னனை
வரையி னால்வலி செற்றவர் வாழ்விடந்
திரையி னார்புடை சூழ்திரு வொற்றியூர்
உரையி னாற்பொலிந் தாருயர்ந் தார்களே.

5.24.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page