5.16 திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

153

மறையு மோதுவர் மான்மறிக் கையினர்
கறைகொள் கண்ட முடைய கபாலியார்
துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்
பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே.

5.16.1
154

கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும்
வணக்கி லாநெறி கண்டுகொண் டாரையுந்
தணக்கு வார்தணிப் பாரெப் பொருளையும்
பிணக்கு வாரவர் பேரெயி லாளரே.

5.16.2
155

சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களை
விரிவிப் பார்வெயிற் பட்ட விளங்கொளி
எரிவிப் பார்தணிப் பாரெப் பொருளையும்
பிரிவிப் பாரவர் பேரெயி லாளரே.

5.16.3
156

செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
உறுவிப் பார்பல பத்தர்கள் ஊழ்வினை
அறுவிப் பாரது வன்றியும் நல்வினை
பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே.

5.16.4
157

மற்றை யாரறி யார்மழு வாளினார்
பற்றி யாட்டியோர் ஐந்தலைப் பாம்பரைச்
சுற்றி யாரவர் தூநெறி யால்மிகு
பெற்றி யாரவர் பேரெயி லாளரே.

5.16.5
158 திருக்கு வார்குழற் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழி யாற்றனை யேத்துவார்
சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றறப்
பெருக்கு வாரவர் பேரெயி லாளரே.
5.16.6
159

முன்னை யார்மயி லூர்தி முருகவேள்
தன்னை யாரெனிற் றானோர் தலைமகன்
என்னை யாளும் இறையவ னெம்பிரான்
பின்னை யாரவர் பேரெயி லாளரே.

5.16.7
160

உழைத்துந் துள்ளியும் உள்ளத்து ளேயுரு
இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல்
அழைக்கும் அன்பின ராய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே.

5.16.8
161

நீரு லாநிமிர் புன்சடை யாவெனா
ஏரு லாவனங் கன்றிறல் வாட்டிய
வாரு லாவன மென்முலை யாளொடும்
பேரு ளாரவர் பேரெயி லாளரே.

5.16.9
162

பாணி யார்படு தம்பெயர்ந் தாடுவர்
தூணி யார்விச யற்கருள் செய்தவர்
மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன்
பேணி யாரவர் பேரெயி லாளரே.

5.16.10
163

மதத்த வாளரக் கன்மணிப் புட்பகஞ்
சிதைக்க வேதிரு மாமலைக் கீழ்ப்புக்குப்
பதைத்தங் கார்த்தெடுத் தான்பத்து நீண்முடி
பிதக்க வூன்றிய பேரெயி லாளரே.

5.16.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page