5.14 திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

136

பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈச னெம்பெரு மான்இடை மருதினிற்
பூச நாம்புகு தும்புன லாடவே.

5.14.1
137

மறையின் நாண்மலர் கொண்டடி வானவர்
முறையி னான்முனி கள்வழி பாடுசெய்
இறைவன் எம்பெரு மான்இடை மருதினில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.

5.14.2
138

கொன்றை மாலையுங் கூவிள மத்தமுஞ்
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்
என்று மெந்தை பிரான்இடை மருதினை
நன்று கைதொழு வார்வினை நாசமே.

5.14.3
139

இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும்
எம்மை யாளும் இடைமரு தன்கழல்
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே.

5.14.4
140

வண்ட ணைந்தன வன்னியுங் கொன்றையுங்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனார்
எண்டி சைக்கும் இடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே.

5.14.5
141

ஏற தேறும் இடைமரு தீசனார்
கூறு வார்வினை தீர்க்குங் குழகனார்
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்
கூறி யூறி உருகுமென் உள்ளமே.

5.14.6
142

விண்ணு ளாரும் விரும்பப் படுவர்
மண்ணு ளாரும் மதிக்கப் படுபவர்
எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை
நண்ணி னாரைநண் ணாவினை நாசமே.

5.14.7
143

வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடுங் கருத்தனார்
எந்தை யென்னிடை மருதினில் ஈசனைச்
சிந்தை யால்நினை வார்வினை தேயுமே.

5.14.8
144

வேத மோதும் விரிசடை அண்ணலார்
பூதம் பாடநின் றாடும் புனிதனார்
ஏதந் தீர்க்கும் இடைமரு தாவென்று
பாத மேத்தப் பறையுநம் பாவமே.

5.14.9
145

கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினுந்
தனிமு டிகவித் தாளு மரசினும்
இனியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே.

5.14.10
146

முற்றி லாமதி சூடும் முதல்வனார்
ஒற்றி னார்மலை யாலரக் கன்முடி
எற்றி னார்கொடி யாரிடை மருதினைப்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே.

5.14.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page