5.13 திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

126

என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல்
நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன்
செம்பொ னேதிரு வீழி மிழலையுள்
அன்ப னேயடி யேனைக் குறிக்கொளே.

5.13.1
127

கண்ணி னாற்களி கூரக்கை யாற்றொழு
தெண்ணு மாறறி யாதிளைப் பேன்றனை
விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள்
அண்ண லேயடி யேனைக் குறிக்கொளே.

5.13.2
128

ஞால மேவிசும் பேநலந் தீமையே
கால மேகருத் தேகருத் தாற்றொழுஞ்
சீல மேதிரு வீழி மிழலையுள்
கோல மேயடி யேனைக் குறிக்கொளே.

5.13.3
129

முத்த னேமுதல் வாமுகி ழும்முளை
ஒத்த னேயொரு வாவுரு வாகிய
சித்த னேதிரு வீழி மிழலையுள்
அத்த னேயடி யேனைக் குறிக்கொளே.

5.13.4
130

கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம்
ஒருவ னேஉயிர்ப் பாய்உணர் வாய்நின்ற
திருவ னேதிரு வீழி மிழலையுள்
குருவ னேயடி யேனைக் குறிக்கொளே.

5.13.5
131

காத்த னேபொழி லேழையுங் காதலால்
ஆத்த னேஅம ரர்க்கயன் றன்றலை
சேர்த்த னேதிரு வீழி மிழலையுள்
கூத்த னேயடி யேனைக் குறிகொளே.

5.13.6
132

நீதி வானவர் நித்தல் நியமஞ்செய்
தோதி வானவ ரும்முண ராததோர்
வேதி யாவிகிர் தாதிரு வீழியுள்
ஆதி யேயடி யேனைக் குறிக்கொளே.

5.13.7
133

பழகி நின்னடி சூடிய பாலனைக்
கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய
அழக னேயணி வீழி மிழலையுள்
குழக னேயடி யேனைக் குறிக்கொளே.

5.13.8
134

அண்ட வானவர் கூடிக் கடைந்தநஞ்
சுண்ட வானவ னேஉணர் வொன்றிலேன்
விண்ட வான்பொழில் வீழி மிழலையுள்
கொண்ட னேயடி யேனைக் குறிக்கொளே.

5.13.9
135

ஒருத்தன் ஓங்கலைத் தாங்கலுற் றானுரம்
வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய
திருத்த னேதிரு வீழி மிழலையுள்
அருத்த னேயடி யேனைக் குறிக்கொளே.

5.13.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page