5.12 திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

115

கரைந்து கைதொழு வாரையுங் காதலன்
வரைந்து வைதெழு வாரையும் வாடலன்
நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும்
விரைந்து போவது வீழி மிழலைக்கே.

5.12.1
116

ஏற்று வெல்கொடி ஈசன்ற னாதிரை
நாற்றஞ் சூடுவர் நன்னறுந் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்
வேற்றுக் கோலங்கொள் வீழி மிழலையே.

5.12.2
117

புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான்
வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான்
நினைய நின்றவன் ஈசனை யேயெனா
வினையி லார்தொழும் வீழி மிழலையே.

5.12.3
118

மாடத் தாடு மனத்துடன் வைத்தவர்
கோடத் தார்குருக் கேத்திரத் தார்பலர்
பாடத் தார்பழிப் பார்பழிப் பல்லதோர்
வேடத் தார்தொழும் வீழி மிழலையே.

5.12.4
119

எடுத்த வெல்கொடி யேறுடை யான்றமர்
உடுப்பர் கோவண முண்பது பிச்சையே
கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை
விடுத்துப் போவது வீழி மிழலைக்கே.

5.12.5
120

குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால்
உழலை யாக்கையை யூணும் உணர்விலீர்
தழலை நீர்மடிக் கொள்ளன்மின் சாற்றினோம்
மிழலை யானடி சாரவிண் ணாள்வரே.

5.12.6
121

தீரன் தீத்திர ளன்சடைத் தங்கிய
நீரன் ஆடிய நீற்றன்வண் டார்கொன்றைத்
தாரன் மாலையன் றண்ணறுங் கண்ணியன்
வீரன் வீழி மிழலை விகிர்தனே.

5.12.7
122

எரியி னாரிறை யாரிடு காட்டிடை
நரியி னார்பரி யாமகிழ் கின்றதோர்
பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை
விரியி னார்தொழு வீழி மிழலையே.

5.12.8
123

நீண்ட சூழ்சடை மேலோர் நிலாமதி
காண்டு சேவடி மேலோர் கனைகழல்
வேண்டு வாரவர் வீதி புகுந்திலர்
மீண்டும் போவது வீழி மிழலைக்கே.

5.12.9
124

பாலை யாழொடு செவ்வழி பண்கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலை யாரழல் அந்தண ராகுதி
வேலை யார்தொழும் வீழி மிழலையே.

5.12.10
125

மழலை யேற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்தெடுத் தான்முடி தோளிறக்
கழல்கொள் காலிற் றிருவிர லூன்றலும்
மிழலை யானடி வாழ்கென விட்டதே.

5.12.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page