|
84 |
ஓத மால்கடல் பாவி உலகெலாம்
மாத ரார்வலங் கொண்மறைக் காடரைக்
காதல் செய்து கருதப் படுமவர்
பாத மேத்தப் பறையுநம் பாவமே. | 5.9.1 |
85 | பூக்குந் தாழை புறணி அருகெலாம்
ஆக்கந் தானுடை மாமறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி யீர்அடி யார்தமை
நோக்கிக் காண்பது நும்பணி செய்யிலே. | 5.9.2
|
86 | புன்னை ஞாழல் புறணி அருகெலாம்
மன்னி னார்வலங் கொண்மறைக் காடரோ
அன்ன மென்னடை யாளையோர் பாகமாச்
சின்ன வேடம் உகப்பது செல்வமே. | 5.9.3
|
87 | அட்ட மாமலர் சூடி அடம்பொடு
வட்டப் புன்சடை மாமறைக் காடரோ
நட்ட மாடியும் நான்மறை பாடியும்
இட்ட மாக இருக்கும் இடமிதே. | 5.9.4
|
88 | நெய்த லாம்பல் நிறைவயல் சூழ்தரும்
மெய்யி னார்வலங் கொண்மறைக் காடரோ
தையல் பாகங்கொண் டீர்கவர் புன்சடைப்
பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே. | 5.9.5
|
89 | துஞ்சும் போதுந் துயிலின்றி ஏத்துவார்
வஞ்சின் றிவலங் கொண்மறைக் காடரோ
பஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந்
தஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே | 5.9.6
|
90 | விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. | 5.9.7
|
91 | திருவி னார்செல்வ மல்கு விழாவணி
மருவி னார்வலங் கொண்மறைக் காடரோ
உருவி னாளுமை மங்கையோர் பாகமாய்
மருவி னாய்கங்கை யைச்சென்னி தன்னிலே. | 5.9.8
|
92 | சங்கு வந்தலைக் குந்தடங் கானல்வாய்
வங்க மார்வலங் கொண்மறைக் காடரோ
கங்கை செஞ்சடை வைப்பது மன்றியே
அங்கை யில்லனல் ஏந்தல் அழகிதே. | 5.9.9
|
93 | குறைக்காட் டான்விட்ட தேர்குத்த மாமலை
இறைக்காட் டியெடுத் தான்றலை ஈரைந்தும்
மறைக்காட் டானிறை ஊன்றலும் வாய்விட்டான்
இறைக்காட் டாயெம் பிரானுனை ஏத்தவே. | 5.9.10
|