5.6 திருவாரூர் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

52

எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்
முப்போ தும்பிர மன்றொழ நின்றவன்
செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன்
அப்போ தைக்கஞ்சல் என்னும்ஆ ரூரனே.

5.6.1
53

சடையின் மேலுமோர் தையலை வைத்தவர்
அடைகி லாவர வைஅரை யார்த்தவர்
படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா
அடைவர் போல்இடு காடர்ஆ ரூரரே.

5.6.2
54

விண்ட வெண்டலை யேகல னாகவே
கொண்ட கம்பலி தேருங் குழகனார்
துண்ட வெண்பிறை வைத்த இறையவர்
அண்ட வாணர்க் கருளும்ஆ ரூரரே.

5.6.3
55

விடையும் ஏறுவர் வெண்டலை யிற்பலி
கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல்
உடையுஞ் சீரை உறைவது காட்டிடை
அடைவர் போல்அரங் காகஆ ரூரரே.

5.6.4
56

துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
வளைக்கை யாளையோர் பாக மகிழ்வெய்தித்
திளைக்குந் திங்கட் சடையிற் திசைமுழு
தளக்கஞ் சிந்தையர் போலும்ஆ ரூரரே.

5.6.5
57

பண்ணின் இன்மொழி யாளையோர் பாகமா
விண்ணி னார்விளங் கும்மதி சூடியே
சுண்ண நீறுமெய்ப் பூசிச் சுடலையின்
அண்ணி யாடுவர் போலும்ஆ ரூரரே.

5.6.6
58

மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறும் இறைவனார்
கட்டு வாங்கங் கனல்மழு மான்றனோ
டட்ட மாம்புய மாகும்ஆ ரூரரே.

5.6.7
59

தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நான்மறை யோதும்ஆ ரூரரே.

5.6.8
60

உண்டு நஞ்சுகண் டத்துள் அடக்கியங்
கிண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்
கொண்ட கோவண ஆடையன் கூரெரி
அண்ட வாணர் அடையும்ஆ ரூரரே.

5.6.9
61

மாலும் நான்முக னும்மறி கிற்கிலார்
கால னாய அவனைக் கடந்திட்டுச்
சூல மான்மழு வேந்திய கையினார்
ஆலம் உண்டழ காயஆ ரூரரே.

5.6.10

திருச்சிற்றம்பலம்


Back to Complete Fifth thirumuRai Index
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page