|
32 |
வட்ட னைமதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு வண்ணா மலையனை
இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்ட னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.1 |
33 | வான னைமதி சூடிய மைந்தனைத்
தேன னைத்திரு வண்ணா மலையனை
ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஆன னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.2
|
34 | மத்த னைமத யானை யுரித்தவெஞ்
சித்த னைத்திரு வண்ணா மலையனை
முத்த னைமுனிந் தார்புர மூன்றெய்த
அத்த னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.3
|
35 | காற்ற னைக்கலக் கும்வினை போயறத்
தேற்ற னைத்திரு வண்ணா மலையனைக்
கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த
ஆற்ற னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.4
|
36 | மின்ன னைவினை தீர்த்தெனை யாட்கொண்ட
தென்ன னைத்திரு வண்ணா மலையனை
என்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
அன்ன னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.5
|
37 | மன்ற னைமதி யாதவன் வேள்விமேற்
சென்ற னைத்திரு வண்ணா மலையனை
வென்ற னைவெகுண் டார்புர மூன்றையுங்
கொன்ற னைக்கொடி யேன்மறந் துய்வனோ. | 5.4.6
|
38 | வீர னைவிட முண்டனை விண்ணவர்
தீர னைத்திரு வண்ணா மலையனை
ஊர னையுண ரார்புர மூன்றெய்த
ஆர னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.7
|
39 | கருவி னைக்கடல் வாய்விட முண்டவெந்
திருவி னைத்திரு வண்ணா மலையனை
உருவி னையுண ரார்புர மூன்றெய்த
அருவி னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.8
|
40 | அருத்த னையர வைந்தலை நாகத்தைத்
திருத்த னைத்திரு வண்ணா மலையனைக்
கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த
அருத்த னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.9
|
41 | அரக்க னையல றவ்விர லூன்றிய
திருத்த னைத்திரு வண்ணா மலையனை
இரக்க மாயென் உடலுறு நோய்களைத்
துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய்வனோ. | 5.4.10
|