5.3 திருநெல்வாயில் அரத்துறை - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

22

கடவு ளைக்கட லுள்ளெழு நஞ்சுண்ட
உடலு ளானையொப் பாரியி லாதவெம்
அடலு ளானை அரத்துறை மேவிய
சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே.

5.3.1
23

கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை
விரும்பொப் பானைவிண் ணோரு மறிகிலா
அரும்பொப் பானை அரத்துறை மேவிய
சுரும்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

5.3.2
24

ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறை
வேறொப் பானைவிண் ணோரு மறிகிலா
ஆறொப் பானை அரத்துறை மேவிய
ஊறொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

5.3.3
25

பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா
இரப்பொப் பானை இளமதி சூடிய
அரப்பொப் பானை அரத்துறை மேவிய
சுரப்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

5.3.4
26

நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர்
மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார்
ஐயொப் பானை அரத்துறை மேவிய
கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

5.3.5
27

நிதியொப் பானை நிதியிற் கிழவனை
விதியொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அதியொப் பானை அரத்துறை மேவிய
கதியொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

5.3.6
28

புனலொப் பானைப் பொருந்தலர் தம்மையே
மினலொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அனலொப் பானை அரத்துறை மேவிய
கனலொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

5.3.7
29

பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர்
மின்னொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அன்னொப் பானை அரத்துறை மேவிய
தன்னொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

5.3.8
30

காழி யானைக் கனவிடை யூருமெய்
வாழி யானைவல் லோருமென் றின்னவர்
ஆழி யான்பிர மற்கும் அரத்துறை
ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே.

5.3.9
31

கலையொப் பானைக்கற் றார்க்கோ ரமுதினை
மலையொப் பானை மணிமுடி யூன்றிய
அலையொப் பானை அரத்துறை மேவிய
நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

5.3.10

திருச்சிற்றம்பலம்


Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page