5.2 கோயில் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

12

பனைக்கை மும்மத வேழ முரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.

5.2.1
13

தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை
மூர்த்தி யைமுத லாய ஒருவனைப்
பார்த்த னுக்கருள் செய்த சிற்றம்பலக்
கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ.

5.2.2
14

கட்டும் பாம்புங் கபாலங் கைமான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ.

5.2.3
15

மாணி பால்கறந் தாட்டி வழிபட
நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவன்
ஆணி யைச்செம்பொன் அம்பலத் துள்நின்ற
தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ.

5.2.4
16

பித்த னைப்பெருங் காடரங் காவுடை
முத்த னைமுளை வெண்மதி சூடியைச்
சித்த னைச்செம்பொன் அம்பலத் துள்நின்ற
அத்த னையடி யேன்மறந் துய்வனோ.

5.2.6
17

நீதி யைநிறை வைமறை நான்குடன்
ஓதி யையொரு வர்க்கு மறிவொணாச்
சோதி யைச்சுடர்ச் செம்பொனின் அம்பலத்
தாதி யையடி யேன்மறந் துய்வனோ.

5.2.6
18

மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணினன்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனார்
செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள்
ஐய னையடி யேன்மறந் துய்வனோ.

5.2.7
19

முழுதும் வானுல கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை
இழுதை யேன்மறந் தெங்ஙனம் உய்வனோ.

5.2.8
20

காரு லாமலர்க் கொன்றையந் தாரனை
வாரு லாமுலை மங்கை மணாளனைத்
தேரு லாவிய தில்லையுட் கூத்தனை
ஆர்கி லாவமு தைமறந் துய்வனோ.

5.2.9
21

ஓங்கு மால்வரை ஏந்தலுற் றான்சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்
தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்
பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ.

5.2.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page