|
1 |
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே. | 5.1.1 |
2 | அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே. | 5.1.2
|
3 | அரிச்சுற் றவினை யால்அடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே. | 5.1.3
|
4 | அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோர் அடிமைபூண் டேனுக்கே. | 5.1.4
|
5 | ஊனி லாவி உயிர்க்கும் பொழுதெலாம்
நானி லாவி யிருப்பனென் னாதனைத்
தேனி லாவிய சிற்றம் பலவனார்
வானி லாவி யிருக்கவும் வைப்பரே. | 5.1.5
|
6 | சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
சிட்டர் பாலணு கான்செறு காலனே. | 5.1.6
|
7 | ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்
திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்
விருத்த னார்இளை யார்விட முண்டவெம்
அருத்த னார்அடி யாரை அறிவரே. | 5.1.7
|
8 | விண்ணி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
எண்ணி றைந்த இருவர்க் கறிவொணாக்
கண்ணி றைந்த கடிபொழில் அம்பலத்
துண்ணி றைந்துநின் றாடும் ஒருவனே. | 5.1.8
|
9 | வில்லைவட் டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லைவட் டம்மதின் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுதல் உண்மையே. | 5.1.9
|
10 | நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் னெஞ்சுள் இருக்கவே. | 5.1.10
|
11 | மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம் பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற
மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே. | 5.1.11
|