4.102 திருவாரூர் - திருவிருத்தம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

986

வேம்பினைப் பேசி விடக்கினை
யோம்பி வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந்
துணையென் றிருத்திர்தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர்
அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித்
தொண்டுபட் டுய்ம்மின்களே.

4.102.1
987

ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன்
ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி
உத்திரம் பாற்படுத்தா
னாரூர் நறுமலர் நாதன்
அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால் திருவிளக் கிட்டமை
நீணா டறியுமன்றே.

4.102.2
988

பூம்படி மக்கலம் பொற்படி
மக்கலம் என்றிவற்றால்
ஆம்படி மக்கல மாகிலும்
ஆரூர் இனிதமர்ந்தார்
தாம்படி மக்கலம் வேண்டுவ
ரேல்தமிழ் மாலைகளால்
நாம்படி மக்கலஞ் செய்து
தொழுதுய் மடநெஞ்சமே.

4.102.3
989

துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத்
துளங்கா மதியணிந்து
முடித்தொண்ட ராகி முனிவர்
பணிசெய்வ தேயுமன்றிப்
பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர்
பாதம் பொறுத்தபொற்பால்
அடித்தொண்டன் நந்தியென் பானுளன்
ஆரூர் அமுதினுக்கே.

4.102.4
990

கரும்பு பிடித்தவர் காயப்பட்
டாரங்கோர் கோடலியால்
இரும்பு பிடித்தவர் இன்புறப்
பட்டார் இவர்கள்நிற்க
அரும்பவிழ் தண்பொழில் சூழணி
ஆரூர் அமர்ந்தபெம்மான்
விரும்பு மனத்தினை யாதொன்று
நானுன்னை வேண்டுவனே.

4.102.5
991

கொடிகொள் விதானங் கவரி
பறைசங்கங் கைவிளக்கோ
டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர்
எய்தியும் ஊனமில்லா
அடிகளும் ஆரூர் அகத்தின
ராயினும் அந்தவளப்
பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு
நந்தி புறப்படிலே.

4.102.6

இப்பதிகத்தில் 7,8,9-ம்செய்யுட்கள் சிதைந்து போயின.

4.102.7-8
992

சங்கொலிப் பித்திடு மின்சிறு
காலைத் தடவழலில்
குங்கிலி யப்புகைக் கூட்டென்றுங்
காட்டி இருபதுதோள்
அங்குலம் வைத்தவன் செங்குரு
திப்புன லோடஅஞ்ஞான்
றங்குலி வைத்தான் அடித்தா
மரையென்னை ஆண்டனவே.

4.102.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page