4.101 திருவாரூர் - திருவிருத்தம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

976

குலம்பலம் பாவரு குண்டர்முன்
னேநமக் குண்டுகொலோ
அலம்பலம் பாவரு தண்புனல்
ஆரூர் அவிர்சடையான்
சிலம்பலம் பாவரு சேவடி
யான்றிரு மூலத்தானம்
புலம்பலம் பாவரு தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

4.101.1
977

மற்றிட மின்றி மனைதுறந்
தல்லுணா வல்லமணர்
சொற்றிட மென்று துரிசுபட்
டேனுக்கு முண்டுகொலோ
விற்றிடம் வாங்கி விசயனோ
டன்றொரு வேடுவனாய்ப்
புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

4.101.2
978

ஒருவடி வின்றிநின் றுண்குண்டர்
முன்னமக் குண்டுகொலோ
செருவடி வெஞ்சிலை யாற்புரம்
அட்டவன் சென்றடையாத்
திருவுடை யான்றிரு வாரூர்த்
திருமூலத் தானன்செங்கட்
பொருவிடை யானடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

4.101.3
979

மாசினை யேறிய மேனியர்
வன்கண்ணர் மொண்ணரைவிட்
டீசனை யேநினைந் தேசறு
வேனுக்கும் உண்டுகொலோ
தேசனை ஆரூர்த் திருமூலத்
தானனைச் சிந்தைசெய்து
பூசனைப் பூசரர் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

4.101.4
980

அருந்தும் பொழுதுரை யாடா
அமணர் திறமகன்று
வருந்தி நினைந்தர னேயென்று
வாழ்த்துவேற் குண்டுகொலோ
திருந்திய மாமதில் ஆரூர்த்
திருமூலத் தானனுக்குப்
பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

4.101.5
981

வீங்கிய தோள்களுந் தாள்களு
மாய்நின்று வெற்றரையே
மூங்கைகள் போலுண்ணு மூடர்முன்
னேநமக் குண்டுகொலோ
தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த்
திருமூலத் தானன்செய்ய
பூங்கழ லானடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

4.101.6
982

பண்ணிய சாத்திரப் பேய்கள்
பறிதலைக் குண்டரைவிட்
டெண்ணிற் புகழீசன் றன்னருள்
பெற்றேற்கு முண்டுகொலோ
திண்ணிய மாமதில் ஆரூர்த்
திருமூலத் தானனெங்கள்
புண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

4.101.7
983

கரப்பர்கள் மெய்யைத் தலைபறிக்
கச்சுகம் என்னுங்குண்டர்
உரைப்பன கேளாதிங் குய்யப்போந்
தேனுக்கும் உண்டுகொலோ
திருப்பொலி ஆரூர்த் திருமூலத்
தானன் திருக்கயிலைப்
பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

4.101.8
984

கையி லிடுசோறு நின்றுண்ணுங்
காதல் அமணரைவிட்
டுய்யும் நெறிகண் டிங்குய்யப்
போந்தேனுக்கு முண்டுகொலோ
ஐயன் அணிவயல் ஆரூர்த்
திருமூலத் தானனுக்குப்
பொய்யன் பிலாவடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

4.101.9
985

குற்ற முடைய அமணர்
திறமது கையகன்றிட்
டுற்ற கருமஞ்செய் துய்யப்போந்
தேனுக்கும் உண்டுகொலோ
மற்பொலி தோளான் இராவணன்
றன்வலி வாட்டுவித்த
பொற்கழ லானடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.

4.101.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page