4.93 திருக்கண்டியூர் - திருவிருத்தம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

903

வானவர் தானவர் வைகல்
மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்
தானவர் மால்பிர மன்னறி
யாத தகைமையினான்
ஆனவ னாதிபு ராணனன்
றோடிய பன்றியெய்த
கானவ னைக்கண்டி யூரண்ட
வாணர் தொழுகின்றதே.

4.93.1
904

வான மதியமும் வாளர
வும்புன லோடுசடைத்
தான மதுவென வைத்துழல்
வான்றழல் போலுருவன்
கான மறியொன்று கையுடை
யான்கண்டி யூரிருந்த
ஊனமில் வேத முடையானை
நாமடி யுள்குவதே.

4.93.2
905

பண்டங் கறுத்ததோர் கையுடை
யான்படைத் தான்றலையை
உண்டங் கறுத்ததும் ஊரொடு
நாடவை தானறியுங்
கண்டங் கறுத்த மிடறுடை
யான்கண்டி யூரிருந்த
தொண்டர் பிரானைக்கண் டீரண்ட
வாணர் தொழுகின்றதே.

4.93.3
906

முடியின்முற் றாததொன் றில்லையெல்
லாமுடன் தானுடையான்
கொடியுமுற் றவ்விடை யேறியோர்
கூற்றொரு பாலுடையான்
கடியமுற் றவ்வினை நோய்களை
வான்கண்டி யூரிருந்தான்
அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண்
டீரண்ட வானவரே.

4.93.4
907

பற்றியோ ரானை யுரித்த
பிரான்பவ ளத்திரள்போல்
முற்றும் அணிந்ததோர் நீறுடை
யான்முன்ன மேகொடுத்த
கற்றங் குடையவன் றானறி
யான்கண்டி யூரிருந்த
குற்றமில் வேத முடையானை
யாமண்டர் கூறுவதே.

4.93.5
908

போர்ப்பனை யானை யுரித்த
பிரான்பொறி வாயரவஞ்
சேர்ப்பது வானத் திரைகடல்
சூழுல கம்மிதனைக்
காப்பது காரண மாகக்கொண்
டான்கண்டி யூரிருந்த
கூர்ப்புடை ஒள்வாள் மழுவனை
யாமண்டர் கூறுவதே.

4.93.6
909

அட்டது காலனை ஆய்ந்தது
வேதமா றங்கமன்று
சுட்டது காமனைக் கண்ணத
னாலே தொடர்ந்தெரியக்
கட்டவை மூன்று மெரித்த
பிரான்கண்டி யூரிருந்த
குட்டமுன் வேதப் படையனை
யாமண்டர் கூறுவதே.

4.93.7
910

அட்டும் ஒலிநீர் அணிமதி
யும்மல ரானவெல்லாம்
இட்டுப் பொதியுஞ் சடைமுடி
யான்இண்டை மாலையங்கைக்
கட்டும் அரவது தானுடை
யான்கண்டி யூரிருந்த
கொட்டும் பறையுடைக் கூத்தனை
யாமண்டர் கூறுவதே.

4.93.8
911

மாய்ந்தன தீவினை மங்கின
நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில்
லாநம்மைச் செற்றநங்கைக்
காய்ந்த பிரான்கண்டி யூரெம்
பிரான்அங்க மாறினையும்
ஆய்ந்த பிரானல்ல னோவடி
யேனையாட் கொண்டவனே.

4.93.9
912

மண்டி மலையை யெடுத்துமத்
தாக்கியவ் வாசுகியைத்
தண்டி அமரர் கடைந்த
கடல்விடங் கண்டருளி
உண்ட பிரான்நஞ் சொளித்தபி
ரான்அஞ்சி யோடிநண்ணக்
கண்ட பிரானல்ல னோகண்டி
யூரண்ட வானவனே.

4.93.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page