4.92 திருவையாறு - திருவிருத்தம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

883

சிந்திப் பரியன சிந்திப்
பவர்க்குச் சிறந்துசெந்தேன்
முந்திப் பொழிவன முத்தி
கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை
தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடும்ஐ
யாறன் அடித்தலமே.

4.92.1
884

இழித்தன ஏழேழ் பிறப்பும்
அறுத்தன என்மனத்தே
பொழித்தன போரெழிற் கூற்றை
யுதைத்தன போற்றவர்க்காய்க்
கிழித்தன தக்கன் கிளரொளி
வேள்வியைக் கீழமுன்சென்
றழித்தன ஆறங்க மானஐ
யாறன் அடித்தலமே.

4.92.2
885

மணிநிற மொப்பன பொன்னிற
மன்னின மின்னியல்வாய்
கணிநிற மன்ன கயிலைப்
பொருப்பன காதல்செய்யத்
துணிவன சீலத்த ராகித்
தொடர்ந்து விடாததொண்டர்க்
கணியன சேயன தேவர்க்கை
யாறன் அடித்தலமே.

4.92.3
886

இருள்தரு துன்பப் படல
மறைப்பமெய்ஞ் ஞானமென்னும்
பொருள்தரு கண்ணிழந் துண்பொருள்
நாடிப் புகலிழந்த
குருடருந் தம்மைப் பரவக்
கொடுநர கக்குழிநின்
றருள்தரு கைகொடுத் தேற்றும்ஐ
யாறன் அடித்தலமே.

4.92.4
887

எழுவாய் இறுவாய் இலாதன
வெங்கட் பிணிதவிர்த்து
வழுவா மருத்துவ மாவன
மாநர கக்குழிவாய்
விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன
மீட்பன மிக்கவன்போ
டழுவார்க் கமுதங்கள் காண்கஐ
யாறன் அடித்தலமே.

4.92.5
888

துன்பக் கடலிடைத் தோணித்
தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக் கரைமுகந் தேற்றுந்
திறத்தன மாற்றயலே
பொன்பட் டொழுகப் பொருந்தொளி
செய்யுமப் பொய்பொருந்தா
அன்பர்க் கணியன காண்கஐ
யாறன் அடித்தலமே.

4.92.6
889

களித்துக் கலந்ததோர் காதற்
கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுதுமுன் நின்றவிப்
பத்தரைக் கோதில்செந்தேன்
தெளித்துச் சுவையமு தூட்டி
யமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும்ஐ
யாறன் அடித்தலமே.

4.92.7
890

திருத்திக் கருத்தினைச் செவ்வே
நிறுத்திச் செறுத்துடலை
வருத்திக் கடிமலர் வாளெடுத்
தோச்சி மருங்குசென்று
விருத்திக் குழக்கவல் லோர்கட்கு
விண்பட் டிகையிடுமால்
அருத்தித் தருந்தவ ரேத்தும்ஐ
யாறன் அடித்தலமே.

4.92.8
891

பாடும் பறண்டையு மாந்தையு
மார்ப்பப் பரந்துபல்பேய்க்
கூடி முழவக் குவிகவிழ்
கொட்டக் குறுநரிகள்
நீடுங் குழல்செய்ய வையம்
நெளிய நிணப்பிணக்காட்
டாடுந் திருவடி காண்கஐ
யாறன் அடித்தலமே.

4.92.9
892

நின்போல் அமரர்கள் நீண்முடி
சாய்த்து நிமிர்த்துகுத்த
பைம்போ துழக்கிப் பவளந்
தழைப்பன பாங்கறியா
என்போ லிகள்பறித் திட்ட
இலையும் முகையுமெல்லாம்
அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ
யாறன் அடித்தலமே.

4.92.10
893

மலையார் மடந்தை மனத்தன
வானோர் மகுடமன்னி
நிலையா யிருப்பன நின்றோர்
மதிப்பன நீணிலத்துப்
புலையாடு புன்மை தவிர்ப்பன
பொன்னுல கம்மளிக்கும்
அலையார் புனற்பொன்னி சூழ்ந்தஐ
யாறன் அடித்தலமே.

4.92.11
894

பொலம்புண் டரீகப் புதுமலர்
போல்வன போற்றியென்பார்
புலம்பும் பொழுதும் புணர்துணை
யாவன பொன்னனைய
சிலம்புஞ் செறிபா டகமுஞ்
செழுங்கிண் கிணித்திரளும்
அலம்பும் திருவடி காண்கஐ
யாறன் அடித்தலமே.

4.92.12
895

உற்றா ரிலாதார்க் குறுதுணை
யாவன ஓதிநன்னூல்
கற்றார் பரவப் பெருமை
யுடையன காதல்செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி
வானகந் தான்கொடுக்கும்
அற்றார்க் கரும்பொருள் காண்கஐ
யாறன் அடித்தலமே.

4.92.13
896

வானைக் கடந்தண்டத் தப்பால்
மதிப்பன மந்திரிப்பார்
ஊனைக் கழித்துய்யக் கொண்டருள்
செய்வன உத்தமர்க்கு
ஞானச் சுடராய் நடுவே
யுதிப்பன நங்கையஞ்ச
ஆனை யுரித்தன காண்கஐ
யாறன் அடித்தலமே.

4.92.14
897

மாதர மானில மாவன
வானவர் மாமுகட்டின்
மீதன மென்கழல் வெங்கச்சு
வீக்கின வெந்நமனார்
தூதரை யோடத் துரப்பன
துன்பறத் தொண்டுபட்டார்க்
காதர மாவன காண்கஐ
யாறன் அடித்தலமே.

4.92.15
898

பேணித் தொழுமவர் பொன்னுல
காளப் பிறங்கருளால்
ஏணிப் படிநெறி யிட்டுக்
கொடுத்திமை யோர்முடிமேல்
மாணிக்க மொத்து மரகதம்
போன்று வயிரமன்னி
ஆணிக் கனகமு மொக்கும்ஐ
யாறன் அடித்தலமே.

4.92.16
899

ஓதிய ஞானமும் ஞானப்
பொருளும் ஒலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியு
மாவன விண்ணுமண்ணுஞ்
சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு
மொப்பன தூமதியோ
டாதியும் அந்தமு மானஐ
யாறன் அடித்தலமே.

4.92.17
900

சுணங்கு முகத்துத் துணைமுலைப்
பாவை சுரும்பொடுவண்
டணங்குங் குழலி யணியார்
வளைக்கரங் கூப்பிநின்று
வணங்கும் பொழுதும் வருடும்
பொழுதும்வண் காந்தளொண்போ
தணங்கும் அரவிந்த மொக்கும்ஐ
யாறன் அடித்தலமே.

4.92.18
901

சுழலார் துயர்வெயிற் சுட்டிடும்
போதடித் தொண்டர்துன்னும்
நிழலா வனவென்று நீங்காப்
பிறவி நிலைகெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ
கால வனங்கடந்த
அழலார் ஒளியன காண்கஐ
யாறன் அடித்தலமே.

4.92.19
902

வலியான் றலைபத்தும் வாய்விட்
டலற வரையடர்த்து
மெலியா வலியுடைக் கூற்றை
யுதைத்துவிண் ணோர்கள்முன்னே
பலிசேர் படுகடைப் பார்த்துப்பன்
னாளும் பலர்இகழ
அலியா நிலைநிற்கும் ஐயன்ஐ
யாறன் அடித்தலமே.

4.92.20

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page