4.89 திருநெய்த்தானம் - திருவிருத்தம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

853

பாரிடஞ் சாடிய பல்லுயிர்
வானம ரர்க்கருளிக்
காரடைந் தகடல் வாயுமிழ்
நஞ்சமு தாகவுண்டான்
ஊரடைந் திவ்வுல கிற்பலி
கொள்வது நாமறியோம்
நீரடைந் தகரை நின்றநெய்த்
தானத் திருந்தவனே.

4.89.1
854

தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி
யாய்நின் திருச்சடைமேற்
பாய்ந்தகங் கைப்புனற் பன்முக
மாகிப் பரந்தொலிப்ப
ஆய்ந்திலங் கும்மழு வேலுடை
யாயடி யேற்குரைநீ
ஏந்திள மங்கையும் நீயும்நெய்த்
தானத் திருந்ததுவே.

4.89.2
855

கொன்றடைந் தாடிக் குமைத்திடுங்
கூற்றமொன் னார்மதின்மேற்
சென்றடைந் தாடிப் பொருததுந்
தேசமெல் லாமறியுங்
குன்றடைந் தாடுங் குளிர்பொழிற்
காவிரி யின்கரைமேற்
சென்றடைந் தார்வினை தீர்க்குநெய்த்
தானத் திருந்தவனே.

4.89.3
856

கொட்டு முழவர வத்தொடு
கோலம் பலஅணிந்து
நட்டம் பலபயின் றாடுவர்
நாகம் அரைக் கசைத்துச்
சிட்டர் திரிபுரந் தீயெழச்
செற்ற சிலையுடையான்
இட்ட முமையொடு நின்றநெய்த்
தானத் திருந்தவனே.

4.89.4
857

கொய்மலர்க் கொன்றை துழாய்வன்னி
மத்தமுங் கூவிளமும்
மெய்மலர் வேய்ந்த விரிசடைக்
கற்றைவிண் ணோர்பெருமான்
மைமலர் நீல நிறங்கருங்
கண்ணியோர் பால்மகிழ்ந்தான்
நின்மல னாடல் நிலயநெய்த்
தானத் திருந்தவனே.

4.89.5
858

பூந்தார் நறுங்கொன்றை மாலையை
வாங்கிச் சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை யேறிப்பல்
பூதப் படைநடுவே
போந்தார் புறவிசை பாடவும்
ஆடவுங் கேட்டருளிச்
சேர்ந்தார் உமையவ ளோடுநெய்த்
தானத் திருந்தவனே.

4.89.6
859

பற்றின பாம்பன் படுத்த
புலியுரித் தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை
மூட்டி யெரித்தறுத்தான்
சுற்றிய பூதப் படையினன்
சூல மழுவொருமான்
செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த்
தானத் திருந்தவனே.

4.89.7
860

விரித்த சடையினன் விண்ணவர்
கோன்விட முண்டகண்டன்
உரித்த கரியுரி மூடியொன்
னார்மதில் மூன்றுடனே
எரித்த சிலையினன் ஈடழியா
தென்னை ஆண்டுகொண்ட
தரித்த உமையவ ளோடுநெய்த்
தானத் திருந்தவனே.

4.89.8
861

தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை
துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளர
வுங்கங்கை தான்புனைந்தான்
தேங்கார் திரிபுரந் தீயெழ
வெய்து தியக்கறுத்து
நீங்கான் உமையவ ளோடுநெய்த்
தானத் திருந்தவனே.

4.89.9
862

ஊட்டிநின் றான்பொரு வானில
மும்மதில் தீயம்பினால்
மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து
வீழவும் வானவர்க்குக்
காட்டிநின் றான்கத மாக்கங்கை
பாயவோர் வார்சடையை
நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த்
தானத் திருந்தவனே.

4.89.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page