4.86 திருவொற்றியூர் - திருவிருத்தம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

822

செற்றுக் களிற்றுரி கொள்கின்ற
ஞான்று செருவெண்கொம்பொன்
றிற்றுக் கிடந்தது போலும்
இளம்பிறை பாம்பதனைச்
சுற்றிக் கிடந்தது கிம்புரி
போலச் சுடரிமைக்கும்
நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமா
லொற்றி யூரனுக்கே.

4.86.1
823

சொல்லக் கருதிய தொன்றுண்டு
கேட்கிற் றொண்டாயடைந்தார்
அல்லற் படக்கண்டு பின்னென்
கொடுத்தி அலைகொள்முந்நீர்
மல்லற் றிரைச்சங்க நித்திலங்
கொண்டுவம் பக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி
யூருறை யுத்தமனே.

4.86.2
824

பரவை வருதிரை நீர்க்கங்கை
பாய்ந்துக்க பல்சடைமேல்
அரவ மணிதரு கொன்றை
இளந்திங்கட் சூடியதோர்
குரவ நறுமலர் கோங்க
மணிந்து குலாய சென்னி
உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி
யூருறை யுத்தமனே.

4.86.3
825

தானகங் காடரங் காக
வுடையது தன்னடைந்தார்
ஊனக நாறு முடைதலை
யிற்பலி கொள்வதுந்தான்
தேனக நாறுந் திருவொற்றி
யூருறை வாரவர்தாந்
தானக மேவந்து போனகம்
வேண்டி உழிதர்வரே.

4.86.4
826

வேலைக் கடல்நஞ்ச முண்டுவெள்
ளேற்றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க் குறைவிட
மாவது வாரிகுன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெற்
கழனி அருகணைந்த
சோலைத் திருவொற்றி யூரையெப்
போதுந் தொழுமின்களே.

4.86.5
827

புற்றினில் வாழும் அரவுக்குந்
திங்கட்குங் கங்கையென்னுஞ்
சிற்றிடை யாட்குஞ் செறிதரு
கண்ணிக்குஞ் சேர்விடமாம்
பெற்றுடை யான்பெரும் பேச்சுடை
யான்பிரி யாதெனையாள்
விற்றுடை யானொற்றி யூருடை
யான்றன் விரிசடையே.

4.86.6
828

இன்றரைக் கண்ணுடை யாரெங்கு
மில்லை இமய மென்னுங்
குன்றரைக் கண்ணன் குலமகட்
பாவைக்குக் கூறிட்டநாள்
அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை
யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி
யூருறை உத்தமனே.

4.86.7
829

சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங்
காவுந் துதைந்திலங்கு
பெற்றிகண் டால்மற்று யாவருங்
கொள்வர் பிறரிடைநீ
ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங்
கைவிட் டுறுமென்றெண்ணி
விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப
தில்லிடம் வேதியனே.

4.86.8
830

சுற்றிக் கிடந்தொற்றி யூரனென்
சிந்தை பிரிவறியான்
ஒற்றித் திரிதந்து நீயென்ன
செய்தி உலகமெல்லாம்
பற்றித் திரிதந்து பல்லொடு
நாமென்று கண்குழித்துத்
தெற்றித் திருப்பதல் லாலென்ன
செய்யுமித் தீவினையே.

4.86.9
831

அங்கட் கடுக்கைக்கு முல்லைப்
புறவம் முறுவல்செய்யும்
பைங்கட் டலைக்குச் சுடலைக்
களரி பருமணிசேர்
கங்கைக்கு வேலை அரவுக்குப்
புற்று கலைநிரம்பாத்
திங்கட்கு வானந் திருவொற்றி
யூரர் திருமுடியே.

4.86.10
832

தருக்கின வாளரக் கன்முடி
பத்திறப் பாதந்தன்னால்
ஒருக்கின வாறடி யேனைப்
பிறப்பறுத் தாளவல்லான்
நெருக்கின வானவர் தானவர்
கூடிக் கடைந்தநஞ்சைப்
பருக்கின வாறென்செய் கேனொற்றி
யூருறை பண்டங்கனே.

4.86.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page