4.82 திருக்கழுமலம் - திருவிருத்தம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

790

பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட
ஞான்றுநின் பாதமெல்லாம்
நாலஞ்சு புள்ளினம் ஏந்தின
என்பர் நளிர்மதியங்
கால்கொண்ட வண்கைச் சடைவிரித்
தாடுங் கழுமலவர்க்
காளன்றி மற்றுமுண் டோ அந்த
ணாழி அகலிடமே.

4.82.1
791

கடையார் கொடிநெடு மாடங்க
ளெங்குங் கலந்திலங்க
உடையா னுடைதலை மாலையுஞ்
சூடி உகந்தருளி
விடைதா னுடையவவ் வேதியன்
வாழுங் கழுமலத்துள்
அடைவார் வினைக ளவையெள்க
நாடொறும் ஆடுவரே.

4.82.2
792

திரைவாய்ப் பெருங்கடல் முத்தங்
குவிப்ப முகந்துகொண்டு
நுரைவாய் நுளைச்சிய ரோடிக்
கழுமலத் துள்ளழுந்தும்
விரைவாய் நறுமலர் சூடிய
விண்ணவன் றன்னடிக்கே
வரையாப் பரிசிவை நாடொறும்
நந்தமை யாள்வனவே.

4.82.3
793

விரிக்கும் அரும்பதம் வேதங்க
ளோதும் விழுமியநூல்
உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர்
கேட்கில் உலகமுற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள்
பாடக் கழுமலவன்
நிருத்தம் பழம்படி யாடுங்
கழல்நம்மை ஆள்வனவே.

4.82.4
794

சிந்தித் தெழுமன மேநினை
யாமுன் கழுமலத்தைப்
பந்தித்த வல்வினை தீர்க்க
வல்லானைப் பசுபதியைச்
சந்தித்த கால மறுத்துமென்
றெண்ணி யிருந்தவர்க்கு
முந்தித் தொழுகழல் நாடொறும்
நந்தம்மை ஆள்வனவே.

4.82.5
795

நிலையும் பெருமையும் நீதியுஞ்
சால அழகுடைத்தாய்
அலையும் பெருவெள்ளத் தன்று
மிதந்தவித் தோணிபுரஞ்
சிலையில் திரிபுரம் மூன்றெரித்
தார்தங் கழுமலவர்
அலருங் கழலடி நாடொறும்
நந்தமை ஆள்வனவே.

4.82.6
796

முற்றிக் கிடந்துமுந் நீரின்
மிதந்துடன் மொய்த்தமரர்
சுற்றிக் கிடந்து தொழப்படு
கின்றது சூழரவந்
தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந்
துன்றிவெண் திங்கள்சூடுங்
கற்றைச் சடைமுடி யார்க்கிட
மாய கழுமலமே.

4.82.7
797

உடலும் உயிரும் ஒருவழிச்
செல்லும் உலகத்துள்ளே
அடையும் உனைவந் தடைந்தார்
அமரர் அடியிணைக்கீழ்
நடையும் விழவொடு நாடொறும்
மல்கும் கழுமலத்துள்
விடையன் தனிப்பதம் நாடொறும்
நந்தமை ஆள்வனவே.

4.82.8
798

பரவைக் கடல்நஞ்ச முண்டது
மில்லையிப் பார்முழுதும்
நிரவிக் கிடந்து தொழப்படு
கின்றது நீண்டிருவர்
சிரமப் படவந்து சார்ந்தார்
கழலடி காண்பதற்கே
அரவக் கழலடி நாடொறும்
நந்தமை ஆள்வனவே.

4.82.9
799

கரையார் கடல்சூழ் இலங்கையர்
கோன்றன் முடிசிதறத்
தொலையா மலரடி ஊன்றலும்
உள்ளம் விதிர்விதிர்த்துத்
தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன்
கழுமலங் காண்பதற்கே
அலையாப் பரிசிவை நாடொறும்
நந்தமை ஆள்வனவே.

4.82.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர், தேவியார் - திருநிலைநாயகி.
திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page