4.81 கோயில் - திருவிருத்தம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

780

கருநட்ட கண்டனை அண்டத்
தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதி லெய்யவல்
லானைச்செந் தீமுழங்கத்
திருநட்ட மாடியைத் தில்லைக்
கிறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்ட மாடியை வானவர்
கோனென்று வாழ்த்துவனே.

4.81.1
781

ஒன்றி யிருந்து நினைமின்கள்
உந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற்
கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட்
சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயெனும் எம்பெரு
மான்றன் திருக்குறிப்பே.

4.81.2
782

கன்மன வீர்கழி யுங்கருத்
தேசொல்லிக் காண்பதென்னே
நன்மன வர்நவில் தில்லையுட்
சிற்றம் பலத்துநட்டம்
பொன்மலை யில்வெள்ளிக் குன்றது
போலப் பொலிந்திலங்கி
என்மன மேயொன்றிப் புக்கனன்
போந்த சுவடில்லையே.

4.81.3
783

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ்
வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற்
பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே.

4.81.4
784

வாய்த்தது நந்தமக் கீதோர்
பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசு பதமருள்
செய்தவன் பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புரந் தீவளைத்
தான்றில்லை யம்பலத்துக்
கூத்தனுக் காட்பட் டிருப்பதன்
றோநந்தங் கூழைமையே.

4.81.5
785

பூத்தன பொற்சடை பொன்போல்
மிளிரப் புரிகணங்கள்
ஆர்த்தன கொட்டி யரித்தன
பல்குறட் பூதகணந்
தேத்தென வென்றிசை வண்டுகள்
பாடுசிற் றம்பலத்துக்
கூத்தனிற் கூத்துவல் லாருள
ரோவென்றன் கோல்வளைக்கே.

4.81.6
786

முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்
நோக்கும் முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்தவெண்
ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித்
தோலுமென் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பலக்
கூத்தன் குரைகழலே.

4.81.7
787

படைக்கல மாகவுன் னாமத்
தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லேன் எழுபிறப்
பும்முனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது
வணங்கித்தூ நீறணிந்துன்
அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச்
சிற்றம் பலத்தரனே.

4.81.8
788

பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ
றணிந்து புரிசடைகள்
மின்னொத் திலங்கப் பலிதேர்ந்
துழலும் விடங்கவேடச்
சின்னத்தி னான்மலி தில்லையுட்
சிற்றம் பலத்துநட்டம்
என்னத்தன் ஆடல்கண் டின்புற்ற
தாலிவ் விருநிலமே.

4.81.9
789

சாட எடுத்தது தக்கன்றன்
வேள்வியிற் சந்திரனை
வீட எடுத்தது காலனை
நாரணன் நான்முகனுந்
தேட எடுத்தது தில்லையுட்
சிற்றம் பலத்துநட்டம்
ஆட எடுத்திட்ட பாதமன்
றோநம்மை யாட்கொண்டதே.

4.81.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page