திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(நான்காம் திருமுறை)

4.79 குறைந்த - திருநேரிசை



திருச்சிற்றம்பலம்

764

தம்மானங் காப்ப தாகித்
தையலார் வலையு ளாழ்ந்து
அம்மானை அமுதன் றன்னை
ஆதியை அந்த மாய
செம்மான ஒளிகொள் மேனிச்
சிந்தையு ளொன்றி நின்ற
எம்மானை நினைய மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே.

4.79.1
765

மக்களே மணந்த தார
மவ்வயிற் றவரை யோம்புஞ்
சிக்குளே யழுந்தி ஈசன்
திறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி
யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப
என்செய்வான் தோன்றி னேனே.

4.79.2
766

கூழையே னாக மாட்டேன்
கொடுவினைக் குழியில் வீழ்ந்து
ஏழினின் னிசையி னாலும்
இறைவனை யேத்த மாட்டேன்
மாழையொண் கண்ணின் நல்ல
மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
ஏழையே னாகி நாளு
மென்செய்வான் தோன்றி னேனே.

4.79.3
767

முன்னையென் வினையி னாலே
மூர்த்தியை நினைய மாட்டேன்
பின்னைநான் பித்த னாகிப்
பிதற்றுவன் பேதை யேன்நான்
என்னுளே மன்னி நின்ற
சீர்மைய தாயி னானை
என்னுளே நினைய மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே.

4.79.4
768

கறையணி கண்டன் றன்னைக்
காமரங் கற்று மில்லேன்
பிறைநுதற் பேதை மாதர்
பெய்வளை யார்க்கு மல்லேன்
மறைநவில் நாவி னானை
மன்னிநின் றிறைஞ்சி நாளும்
இறையேயு மேத்த மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே.

4.79.5
இப்பதிகத்தில் 6,7,8,9-ம்செய்யுட்கள்
மறைந்து போயின.
4.79.6-91
769

வளைத்துநின் றைவர் கள்வர்
வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித்
தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற
ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றேன்
என்செய்வான் தோன்றி னேனே.

4.79.10

திருச்சிற்றம்பலம்
Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page