திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(நான்காம் திருமுறை)

4.75 தனித் - திருநேரிசை



திருச்சிற்றம்பலம்

726

தொண்டனேன் பட்ட தென்னே
தூயகா விரியின் நன்னீர்
கொண்டிருக் கோதி யாட்டிக்
குங்குமக் குழம்பு சாத்தி
இண்டைகொண் டேற நோக்கி
ஈசனை எம்பி ரானைக்
கண்டனைக் கண்டி ராதே
காலத்தைக் கழித்த வாறே.

4.75.1
727

பின்னிலேன் முன்னி லேன்நான்
பிறப்பறுத் தருள்செய் வானே
என்னிலேன் நாயி னேன்நான்
இளங்கதிர்ப் பயலைத் திங்கட்
சின்னிலா எறிக்குஞ் சென்னிச்
சிவபுரத் தமர ரேறே
நின்னலால் களைகண் ஆரே
நீறுசே ரகலத் தானே.

4.75.2
728

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க்
காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று
தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற் றெல்லாம்
உடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும்
விலாவிறச் சிரித்திட் டேனே.

4.75.3
729

உடம்பெனு மனைய கத்துள்
உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி
உயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயால்
எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை
கழலடி காண லாமே.

4.75.4
730

வஞ்சப்பெண் ணரங்கு கோயில்
வாளெயிற் றரவந் துஞ்சா
வஞ்சப்பெண் இருந்த சூழல்
வான்றவழ் மதியந் தோயும்
வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன்
வாழ்வினை வாழ லுற்று
வஞ்சப்பெண் ணுறக்க மானேன்
வஞ்சனேன் என்செய் கேனே.

4.75.5
731

உள்குவார் உள்ளத் தானை
உணர்வெனும் பெருமை யானை
உள்கினேன் நானுங் காண்பான்
உருகினேன் ஊறி யூறி
எள்கினேன் எந்தை பெம்மான்
இருதலை மின்னு கின்ற
கொள்ளிமேல் எறும்பென் னுள்ளம்
எங்ஙனங் கூடு மாறே.

4.75.6
732

மோத்தையைக் கண்ட காக்கை
போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா
மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச்
செடிகொள்நோய் வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ணம்
உணர்வுதா உலக மூர்த்தீ.

4.75.7
733

அங்கத்தை மண்ணுக் காக்கி
ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப்
பாவித்தேன் பரமா நின்னைs
சங்கொத்த மேனிச் செல்வா
சாதல்நாள் நாயேன் உன்னை
எங்குற்றாய் என்ற போதா
இங்குற்றேன் என்கண் டாயே.

4.75.8
734

வெள்ளநீர்ச் சடைய னார்தாம்
வினவுவார் போல வந்தென்
உள்ளமே புகுந்து நின்றார்க்
குறங்குநான் புடைகள் போந்து
கள்ளரோ புகுந்தீ ரென்னக்
கலந்துதான் நோக்கி நக்கு
வெள்ளரோ மென்று நின்றார்
விளங்கிளம் பிறைய னாரே.

4.75.9
735

பெருவிரல் இறைதா னூன்ற
பிறையெயி றிலங்க அங்காந்
தருவரை அனைய தோளான்
அரக்கனன் றலறி வீழ்ந்தான்
இருவரும் ஒருவ னாய
உருவமங் குடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு
காண்கநான் திரியு மாறே.

4.75.10

திருச்சிற்றம்பலம்
Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page