4.69 திருக்கோவலூர்வீரட்டம் - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

669

செத்தையேன் சிதம்ப நாயேன்
செடியனேன் அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும்
புகலிடம் அறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கேன்
இருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வ தென்னே
கோவல்வீ ரட்ட னீரே.

4.69.1
670

தலைசுமந் திருகை நாற்றித்
தரணிக்கே பொறைய தாகி
நிலையிலா நெஞ்சந் தன்னுள்
நித்தலும் ஐவர் வேண்டும்
விலைகொடுத் தறுக்க மாட்டேன்
வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
குலைகொள்மாங் கனிகள் சிந்தும்
கோவல்வீ ரட்ட னீரே.

4.69.2
671

வழித்தலைப் படவு மாட்டேன்
வைகலுந் தூய்மை செய்து
பழித்திலேன் பாச மற்றுப்
பரமநான் பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை
என்னினைந் திருக்க மாட்டேன்
கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க்
கோவல்வீ ரட்ட னீரே.

4.69.3
672

சாற்றுவர் ஐவர் வந்து
சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக்
கண்செவி மூக்கு வாயுள்
ஆற்றுவர் அலந்து போனேன்
ஆதியை அறிவொன் றின்றிக்
கூற்றுவர் வாயிற் பட்டேன்
கோவல்வீ ரட்ட னீரே.

4.69.4
673

தடுத்திலேன் ஐவர் தம்மைத்
தத்துவத் துயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப்
பன்மலர்ப் பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யார
ஆர்வலித் தன்பு திண்ணங்
கொடுத்திலேன் கொடிய வாநான்
கோவல்வீ ரட்ட னீரே.

4.69.5
674

மாச்செய்த குரம்பை தன்னை
மண்ணிடை மயக்க மெய்து
நாச்செய்து நாலு மைந்தும்
நல்லன வாய்தல் வைத்துக்
காச்செய்த காயந் தன்னுள்
நித்தலும் ஐவர் வந்து
கோச்செய்து குமைக்க வாற்றேன்
கோவல்வீ ரட்ட னீரே.

4.69.6
675

படைகள்போல் வினைகள் வந்து
பற்றியென் பக்கல் நின்றும்
விடகிலா வாத லாலே
விகிர்தனை விரும்பி யேத்தும்
இடையிலேன் என்செய் கேன்நான்
இரப்பவர் தங்கட் கென்றுங்
கொடையிலேன் கொள்வ தேநான்
கோவல்வீ ரட்ட னீரே.

4.69.7
676

பிச்சிலேன் பிறவி தன்னைப்
பேதையேன் பிணக்க மென்னுந்
துச்சுளே அழுந்தி வீழ்ந்து
துயரமே இடும்பை தன்னுள்
அச்சனாய் ஆதி மூர்த்திக்
கன்பனாய் வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வ தென்னே
கோவல்வீ ரட்ட னீரே.

4.69.8
677

நிணத்திடை யாக்கை பேணி
நியமஞ்செய் திருக்க மாட்டேன்
மணத்திடை ஆட்டம் பேசி
மக்களே சுற்ற மென்னுங்
கணத்திடை ஆட்டப் பட்டுக்
காதலால் உன்னைப் பேணுங்
குணத்திடை வாழ மாட்டேன்
கோவல்வீ ரட்ட னீரே.

4.69.9
678

விரிகடல் இலங்கைக் கோனை
வியன்கயி லாயத் தின்கீழ்
இருபது தோளும் பத்துச்
சிரங்களும் நெறிய வூன்றிப்
பரவிய பாடல் கேட்டுப்
படைகொடுத் தருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த
கோவல்வீ ரட்ட னாரே.

4.69.10

இத்தலம் நடு நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசநாதர், தேவியார் - சிவாநந்தவல்லி.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page