4.67 திருக்கொண்டீச்சரம் - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

649

வரைகிலேன் புலன்க ளைந்தும்
வரைகிலாப் பிறவி மாயப்
புரையிலே அடங்கி நின்று
புறப்படும் வழியுங் காணேன்
அரையிலே மிளிரு நாகத்
தண்ணலே அஞ்ச லென்னாய்
திரையுலாம் பழன வேலித்
திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.1
650

தொண்டனேன் பிறந்து வாளா
தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து
பேர்வதோர் வழியுங் காணேன்
அண்டனே அண்ட வாணா
அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த
திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.2
651

கால்கொடுத் தெலும்பு மூட்டிக்
கதிர்நரம் பாக்கை யார்த்துத்
தோலுடுத் துதிர மட்டித்
தொகுமயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத் துழைஞர் கூடி
ஒளிப்பதற் கஞ்சு கின்றேன்
சேலுடைப் பழனஞ் சூழ்ந்த
திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.3
652

கூட்டமாய் ஐவர் வந்து
கொடுந்தொழிற் குணத்த ராகி
ஆட்டுவார்க் காற்ற கில்லேன்
ஆடர வசைத்த கோவே
காட்டிடை யரங்க மாக
ஆடிய கடவு ளேயோ
சேட்டிரும் பழன வேலித்
திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.4
653

பொக்கமாய் நின்ற பொல்லாப்
புழுமிடை முடைகொள் ஆக்கை
தொக்குநின் றைவர் தொண்ணூற்
றறுவருந் துயக்க மெய்த
மிக்குநின் றிவர்கள் செய்யும்
வேதனைக் கலந்து போனேன்
செக்கரே திகழும் மேனித்
திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.5
654

ஊனுலா முடைகொள் ஆக்கை
உடைகல மாவ தென்றும்
மானுலா மழைக்க ணார்தம்
வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
நானெலா மினைய கால
நண்ணிலேன் எண்ண மில்லேன்
தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த
திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.6
655

சாணிரு மடங்கு நீண்ட
சழக்குடைப் பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்
றறுவரும் மயக்கஞ் செய்து
பேணிய பதியின் நின்று
பெயரும்போ தறிய மாட்டேன்
சேணுயர் மாட நீடு
திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.7
656

பொய்மறித் தியற்றி வைத்துப்
புலால்கமழ் பண்டம் பெய்து
பைமறித் தியற்றி யன்ன
பாங்கிலாக் குரம்பை நின்று
கைமறித் தனைய வாவி
கழியும்போ தறிய மாட்டேன்
சென்னெறிச் செலவு காணேன்
திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.8
657

பாலனாய்க் கழிந்த நாளும்
பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும்
மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளுங்
குறிக்கோளி லாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித்
திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.9
658

விரைதரு கருமென் கூந்தல்
விளங்கிழை வேலொண் கண்ணாள்
வெருவர இலங்கைக் கோமான்
விலங்கலை எடுத்த ஞான்று
பருவரை யனைய தோளும்
முடிகளும் பாரி வீழத்
திருவிர லூன்றி னானே
திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - சாந்தநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page