4.60 திருப்பெருவேளூர் - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

578

மறையணி நாவி னானை
மறப்பிலார் மனத்து ளானைக்
கறையணி கண்டன் றன்னைக்
கனலெரி யாடி னானைப்
பிறையணி சடையி னானைப்
பெருவேளூர் பேணி னானை
நறையணி மலர்கள் தூவி
நாடொறும் வணங்கு வேனே.

4.60.1
579

நாதனாய் உலக மெல்லாம்
நம்பிரான் எனவும் நின்ற
பாதனாம் பரம யோகி
பலபல திறத்தி னாலும்
பேதனாய்த் தோன்றி னானைப்
பெருவேளூர் பேணி னானை
ஓதநா வுடைய னாகி
உரைக்குமா றுரைக்கின் றேனே.

4.60.2
580

குறவிதோள் மணந்த செல்வக்
குமரவேள் தாதை யென்று
நறவிள நறுமென் கூந்தல்
நங்கையோர் பாகத் தானைப்
பிறவியை மாற்று வானைப்
பெருவேளூர் பேணி னானை
உறவினால் வல்ல னாகி
உணருமா றுணர்த்து வேனே.

4.60.3
581

மைஞ்ஞவில் கண்டன் றன்னை
வலங்கையின் மழுவொன் றேந்திக்
கைஞ்ஞவில் மானி னோடுங்
கனலெரி யாடி னானைப்
பிஞ்ஞகன் றன்னை அந்தண்
பெருவேளூர் பேணி னானைப்
பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப்
பொறியிலா அறிவி லேனே.

4.60.4
582

ஓடைசேர் நெற்றி யானை
உரிவையை மூடி னானை
வீடதே காட்டு வானை
வேதநான் காயி னானைப்
பேடைசேர் புறவ நீங்காப்
பெருவேளூர் பேணி னானைக்
கூடநான் வல்ல மாற்றங்
குறுகுமா றறிகி லேனே.

4.60.5
583

கச்சைசேர் நாகத் தானைக்
கடல்விடங் கண்டத் தானைக்
கச்சியே கம்பன் றன்னைக்
கனலெரி யாடு வானைப்
பிச்சைசேர்ந் துழல்வி னானைப்
பெருவேளூர் பேணி னானை
இச்சைசேர்ந் தமர நானும்
இறைஞ்சுமா றிறைஞ்சு வேனே.

4.60.6
584

சித்தராய் வந்து தன்னைத்
திருவடி வணங்கு வார்கள்
முத்தனை மூர்த்தி யாய
முதல்வனை முழுது மாய
பித்தனைப் பிறரு மேத்தப்
பெருவேளூர் பேணி னானை
மெத்தனே யவனை நாளும்
விரும்புமா றறிகி லேனே.

4.60.7
585

முண்டமே தாங்கி னானை
முற்றிய ஞானத் தானை
வண்டுலாங் கொன்றை மாலை
வளர்மதிக் கண்ணி யானைப்
பிண்டமே ஆயி னானைப்
பெருவேளூர் பேணி னானை
அண்டமாம் ஆதி யானை
அறியுமா றறிகி லேனே.

4.60.8
586

விரிவிலா அறிவி னார்கள்
வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும்
எம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோ ரேத்தும்
பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி உய்யும்
வகையது நினைக்கின் றேனே.

4.60.9
587

பொருகடல் இலங்கை மன்னன்
உடல்கெடப் பொருத்தி நல்ல
கருகிய கண்டத் தானைக்
கதிரிளங் கொழுந்து சூடும்
பெருகிய சடையி னானைப்
பெருவேளூர் பேணி னானை
உருகிய அடிய ரேத்தும்
உள்ளத்தால் உள்கு வேனே.

4.60.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரியாதநாதர், தேவியார் - மின்னனையாளம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page