4.58 திருப்பருப்பதம் - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

558

கன்றினார் புரங்கள் மூன்றுங்
கனலெரி யாகச் சீறி
நின்றதோ ருருவந் தன்னால்
நீர்மையும் நிறையுங் கொண்டு
ஒன்றியாங் குமையுந் தாமும்
ஊர்பலி தேர்ந்து பின்னும்
பன்றிப்பின் வேட ராகிப்
பருப்பத நோக்கி னாரே.

4.58.1
559

கற்றமா மறைகள் பாடிக்
கடைதொறும் பலியுந் தேர்வார்
வற்றலோர் தலைகை யேந்தி
வானவர் வணங்கி வாழ்த்த
முற்றவோர் சடையில் நீரை
ஏற்றமுக் கண்ணர் தம்மைப்
பற்றினார்க் கருள்கள் செய்து
பருப்பத நோக்கி னாரே.

4.58.2
560

கரவிலா மனத்த ராகிக்
கைதொழு வார்கட் கென்றும்
இரவினின் றெரிய தாடி
இன்னருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்று
மாட்டிய நகைய ராகிப்
பரவுவார்க் கருள்கள் செய்து
பருப்பத நோக்கி னாரே.

4.58.3
561

கட்டிட்ட தலைகை யேந்திக்
கனலெரி யாடிச் சீறிச்
சுட்டிட்ட நீறு பூசிச்
சுடுபிணக் காட ராகி
விட்டிட்ட வேட்கை யார்க்கு
வேறிருந் தருள்கள் செய்து
பட்டிட்ட வுடைய ராகிப்
பருப்பத நோக்கி னாரே.

4.58.4
562

கையராய்க் கபால மேந்திக்
காமனைக் கண்ணாற் காய்ந்து
மெய்யராய் மேனி தன்மேல்
விளங்குவெண் ணீறு பூசி
உய்யரா யுள்கு வார்கட்
குவகைகள் பலவுஞ் செய்து
பையரா அரையி லார்த்துப்
பருப்பத நோக்கி னாரே.

4.58.5
563

வேடராய் வெய்ய ராகி
வேழத்தி னுரிவை போர்த்து
ஓடரா யுலக மெல்லா
முழிதர்வர் உமையுந் தாமுங்
காடராய்க் கனல்கை யேந்திக்
கடியதோர் விடைமேற் கொண்டு
பாடராய்ப் பூதஞ் சூழப்
பருப்பத நோக்கி னாரே.

4.58.6
564

மேகம்போல் மிடற்ற ராகி
வேழத்தி னுரிவை போர்த்து
ஏகம்பம் மேவி னார்தாம்
இமையவர் பரவி யேத்தக்
காகம்பர் கழற ராகிக்
கடியதோர் விடையொன் றேறிப்
பாகம்பெண் ணுருவ மானார்
பருப்பத நோக்கி னாரே.

4.58.7
565

பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும்
பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
காருடைக் கண்ட ராகிக்
கபாலமோர் கையி லேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே
றேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப்
பருப்பத நோக்கி னாரே.

4.58.8
566

அங்கண்மா லுடைய ராய
ஐவரா லாட்டு ணாதே
உங்கள்மால் தீர வேண்டில்
உள்ளத்தா லுள்கி யேத்துஞ்
செங்கண்மால் பரவி யேத்திச்
சிவனென நின்ற செல்வர்
பைங்கண்வெள் ளேற தேறிப்
பருப்பத நோக்கி னாரே.

4.58.9
567

அடல்விடை யூர்தி யாகி
அரக்கன்றோள் அடர வூன்றிக்
கடலிடை நஞ்ச முண்ட
கறையணி கண்ட னார்தாஞ்
சுடர்விடு மேனி தன்மேற்
சுண்ணவெண் ணீறு பூசிப்
படர்சடை மதியஞ் சேர்த்திப்
பருப்பத நோக்கி னாரே.

4.58.10

இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பருப்பதேசுவரர், தேவியார் - மனோன்மணியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page