4.47 திருக்கயிலாயம் - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

456

கனகமா வயிர முந்து
மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி
யெடுத்தலு முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற ஈச
னூன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா யூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.1
457

கதித்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
அதிர்த்தவன் எடுத்தி டலும்
அரிவைதான் அஞ்ச ஈசன்
நெதித்தவ னூன்றி யிட்ட
நிலையழிந் தலறி வீழ்ந்தான்
மதித்திறை யூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.2
458

கறுத்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையைக் கையால்
மறித்தலும் மங்கை அஞ்ச
வானவர் இறைவன் நக்கு
நெறித்தொரு விரலா லூன்ற
நெடுவரை போல வீழ்ந்தான்
மறித்திறை யூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.3
459

கடுத்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
எடுத்தலும் மங்கை அஞ்ச
இறையவ னிறையே நக்கு
நொடிப்பள விரலா லூன்ற
நோவது மலறி யிட்டான்
மடித்திறை யூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.4
460

கன்றித்தன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
வென்றித்தன் கைத்த லத்தா
லெடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாத
னூன்றலு நகழ வீழ்ந்தான்
மன்றித்தான் ஊன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.5
461

களித்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
நெளித்தவ னெடுத்தி டலும்
நேரிழை அஞ்ச நோக்கி
வெளித்தவ னூன்றி யிட்ட
வெற்பினா லலறி வீழ்ந்தான்
மளித்திறை யூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.6
462

கருத்தனாய்க் கண்சி வந்து
கயிலைநன் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்த வாறே
ஏந்திழை அஞ்ச ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன்
திருவிர லூன்ற வீழ்ந்தான்
வருத்துவான் ஊன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.7
463

கடியவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
வடிவுடை மங்கை அஞ்ச
எடுத்தலும் மருவ நோக்கிச்
செடிபடத் திருவி ரலா
லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்
வடிவுற வூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.8
464

கரியத்தான் கண்சி வந்து
கயிலைநன் மலையைப் பற்றி
இரியத்தான் எடுத்தி டலும்
ஏந்திழை அஞ்ச ஈசன்
நெரியத்தான் ஊன்றா முன்னம்
நிற்கிலா தலறி வீழ்ந்தான்
மரியத்தான் ஊன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.9
465

கற்றனன் கயிலை தன்னைக்
காண்டலும் அரக்கன் ஓடிச்
செற்றவன் எடுத்த வாறே
சேயிழை அஞ்ச ஈசன்
உற்றிறை ஊன்றா முன்னம்
உணர்வழி வகையால் வீழ்ந்தான்
மற்றிறை ஊன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.

4.47.10

இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கைலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page