4.43 திருக்கச்சிமேற்றளி - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

424

மறையது பாடிப் பிச்சைக்
கென்றகந் திரிந்து வாழ்வார்
பிறையது சடைமு டிமேற்
பெய்வளை யாள்தன் னோடுங்
கறையது கண்டங் கொண்டார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
இறையவர் பாட லாடல்
இலங்குமேற் றளிய னாரே.

4.43.1
425

மாலன மாயன் றன்னை
மகிழ்ந்தனர் விருத்த ராகும்
பாலனார் பசுப தியார்
பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலாற் செற்றார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏலநற் கடம்பன் தாதை
இலங்குமேற் றளிய னாரே.

4.43.2
426

விண்ணிடை விண்ண வர்கள்
விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப்
பண்ணிடைச் சுவையின் மிக்க
கின்னரம் பாடல் கேட்டார்
கண்ணிடை மணியி னொப்பார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணிடை யெழுத்து மானார்
இலங்குமேற் றளிய னாரே.

4.43.3
427

சோமனை அரவி னோடு
சூழ்தரக் கங்கை சூடும்
வாமனை வான வர்கள்
வலங்கொடு வந்து போற்றக்
காமனைக் காய்ந்த கண்ணார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏமநின் றாடும் எந்தை
இலங்குமேற் றளிய னாரே.

4.43.4
428

ஊனவ ருயிரி னோடு
முலகங்க ளூழி யாகித்
தானவர் தனமு மாகித்
தனஞ்சய னோடெ திர்ந்த
கானவர் காள கண்டர்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏனமக் கோடு பூண்டார்
இலங்குமேற் றளிய னாரே.

4.43.5
429

மாயனாய் மால னாகி
மலரவ னாகி மண்ணாய்த்
தேயமாய்த் திசையெட் டாகித்
தீர்த்தமாய்த் திரிதர் கின்ற
காயமாய்க் காயத் துள்ளார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏயமென் றோளி பாகர்
இலங்குமேற் றளிய னாரே.

4.43.6
430

மண்ணினை யுண்ட மாயன்
தன்னையோர் பாகங் கொண்டார்
பண்ணினைப் பாடி யாடும்
பத்தர்கள் சித்தங் கொண்டார்
கண்ணினை மூன்றுங் கொண்டார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணினை யெண்ண வைத்தார்
இலங்குமேற் றளிய னாரே.

4.43.7
431

செல்வியைப் பாகங் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார்
இலங்குமேற் றளிய னாரே.

4.43.8
432

வேறிணை யின்றி யென்றும்
விளங்கொளி மருங்கி னாளைக்
கூறிய லாக வைத்தார்
கோளரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார்
அணிபொழிற் கச்சி தன்னுள்
ஏறினை யேறு மெந்தை
இலங்குமேற் றளிய னாரே.

4.43.9
433

தென்னவன் மலையெ டுக்கச்
சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற
மணிமுடி நெரிய வாயாற்
கன்னலின் கீதம் பாடக்
கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளிச் செய்தார்
இலங்குமேற் றளிய னாரே.

4.43.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமேற்றளிநாதர், தேவியார் - திருமேற்றளிநாயகி.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page