4.42 திருத்துருத்தி - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

414

பொருத்திய குரம்பை தன்னைப்
பொருளெனக் கருத வேண்டா
இருத்தியெப் போதும் நெஞ்சுள்
இறைவனை ஏத்து மின்கள்
ஒருத்தியைப் பாகம் வைத்தங்
கொருத்தியைச் சடையில் வைத்த
துருத்தியஞ் சுடரி னானைத்
தொண்டனேன் கண்ட வாறே.

4.42.1
415

சவைதனைச் செய்து வாழ்வான்
சலத்துளே யழுந்து கின்ற
இவையொரு பொருளு மல்ல
இறைவனை ஏத்து மின்னோ
அவைபுர மூன்றும் எய்தும்
அடியவர்க் கருளிச் செய்த
சுவையினைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.

4.42.2
416

உன்னியெப் போதும் நெஞ்சுள்
ஒருவனை ஏத்து மின்னோ
கன்னியை ஒருபால் வைத்துக்
கங்கையைச் சடையுள் வைத்துப்
பொன்னியின் நடுவு தன்னுள்
பூம்புனல் பொலிந்து தோன்றுந்
துன்னிய துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.

4.42.3
417

ஊன்றலை வலிய னாகி
உலகத்துள் உயிர்கட் கெல்லாந்
தான்றலைப் பட்டு நின்று
சார்கன லகத்து வீழ
வான்றலைத் தேவர் கூடி
வானவர்க் கிறைவா வென்னுந்
தோன்றலைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.

4.42.4
418

உடல்தனைக் கழிக்க லுற்ற
உலகத்துள் உயிர்கட் கெல்லாம்
இடர்தனைக் கழிக்க வேண்டில்
இறைவனை ஏத்து மின்னோ
கடல்தனில் நஞ்ச முண்டு
காண்பரி தாகி நின்ற
சுடர்தனைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.

4.42.5
419

அள்ளலைக் கடக்க வேண்டில்
அரனையே நினைமி னீணர்கள்
பொள்ளலிக் காயந் தன்னுட்
புண்டரீ கத்தி ருந்த
வள்ளலை வான வர்க்குங்
காண்பரி தாகி நின்ற
துள்ளலைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.

4.42.6
420

பாதியில் உமையாள் தன்னைப்
பாகமா வைத்த பண்பன்
வேதியன் என்று சொல்லி
விண்ணவர் விரும்பி ஏத்தச்
சாதியாஞ் சதுர்மு கனுஞ்
சக்கரத் தானுங் காணாச்
சோதியைத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.

4.42.7
421

சாமனை வாழ்க்கை யான
சலத்துளே யழுந்த வேண்டா
தூமநல் லகிலுங் காட்டித்
தொழுதடி வணங்கு மின்னோ
சோமனைச் சடையுள் வைத்துத்
தொன்னெறி பலவுங் காட்டுந்
தூமனத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்டா வாறே.

4.42.8
422

குண்டரே சமணர் புத்தர்
குறியறி யாது நின்று
கண்டதே கருது வார்கள்
கருத்தெண்ணா தொழிமி னீணர்கள்
விண்டவர் புரங்கள் எய்து
விண்ணவர்க் கருள்கள் செய்த
தொண்டர்கள் துணையி னானைத்
துருத்திநான் கண்ட வாறே.

4.42.9
423

பிண்டத்தைக் கழிக்க வேண்டிற்
பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட
அடலரக் கன்றன் ஆண்மை
கண்டொத்துக் கால்வி ரலால்
ஊன்றிமீண் டருளிச் செய்த
துண்டத்துத் துருத்தி யானைத்
தொண்டனேன் கண்ட வாறே.

4.42.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதேசுவரர்,
தேவியார் - முகிழாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page